சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் சுமார் 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர்,  பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு  முதல்கட்டமாக,  15 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அதில், சென்னை மாநகராட்சியில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஆவடி, தாம்பரம், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளுக்கு தலா 1 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் கோவை சரகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனியும்; மதுரை சரகத்தில், மதுரை மற்றும் விருதுநகருக்கு 1 கம்பெனியும்; நெல்லை சரகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசிக்கு 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் 15 கம்பெனி துணை ராணுவத்தினரும் பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.

அடுத்தக்கட்டமாக வரும் 7-ந் தேதியன்று 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். அவர்கள்,, காஞ்சிபுரம் சரகத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; வேலூர் சரகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; விழுப்புரம் சரகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; சேலம் சரகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; திருச்சி சரகத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனி; தஞ்சாவூர் சரகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனி; மதுரை சரகத்தில் மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி; திண்டுக்கல் சரகத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி; ராமநாதபுரம் சரகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி துணை ராணுவத்தினர் பிரித்து அனுப்பப்படுவார்கள்.  தற்போது மிகவும் குறைவான அளவு துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.

தேர்தல் பணியாளர்கள் தொடர்பான பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. பட்டியல் பெறப்பட்டதும், அவர்களுக்கான பயிற்சி குறித்து முடிவெடுக்கப்படும். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 5 பேர் என்ற அடிப்படையில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அந்த வகையில், 3.32 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்த்தல் பணி முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாகவும், பின்னர் வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து அவை மீண்டும் சரிபார்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.