பெங்களூர்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேகதாதுவில் காவிரி குறுக்கே 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டும் பகுதியில் கட்டுமான பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

பத்திரிகை செய்தி அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, மத்திய அரசும், தமிழ்நாடு, கர்நாடக அரசுகளும் பதிலளிக்க உத்தரவிட்டது.

மேலும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா? என்பதையும், அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு ஜூலை 5-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.