டில்லி :

ஓரியன்டல் வங்கியில் ரூ. 360 கோடி மோசடி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,300 கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.

இந்த வங்கி மோசடியை தொடர்ந்து தினம் தினம் ஏதேனும் ஒரு ஒரு வங்கியில் நடந்த மோசடி வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் இன்று, ஓரியன்டல் வங்கியில் நகை வியாபாரி ஒருவர் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

டில்லியைச் சேர்ந்த நகை வியாபாரி மோசடி செய்ததாக கடந்த 6 மாதங்களாக ஓரியன்டல் வங்கி அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் சிபிஐ தற்போது வழக்கு பதிந்துள்ளது. டில்லியைச் சேர்ந்த நகை வியாபாரி சப்யா சேத், ரீடா சேத், கிருஷ்ணகுமார் சிங், ரவி குமார் சிங் ஆகிய 4 பேர் மீது இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஓரியண்டல் வங்கியில் ரூ.390 கோடி அளவிற்கு கடன் பெற்று, மோசடி செய்ததாக கூறப்படுகிறது.கூட்டாக நகை வியாபாரம் செய்து வரும் இவர்கள் 4 பேரும் 2007 ம் ஆண்டு முதல் வங்கியில் கடன் வாங்கி வந்துள்ளனர். கடந்த 10 மாதங்களாக இவர்கள் நால்வரையும் பேரையும் தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களை பற்றி வங்கி அதிகாரிகள் விசாரித்து வந்துள்ளனர்.

இவர்களில் சப்யா சேத் வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் இவ்வங்கி, சிபிஐ.,யிடம் புகார் அளித்தது. சப்யா சேத்தின் தொழில் கூட்டாளிகள் பலர் துபாய் இருப்பதும், அவர்களுடன் சப்யா சேத் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.