வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் 2 மாத கால ஊரடங்கிற்குப் பின்னர், வழக்கமான நிலை வேகமாக திரும்புகிறது. கொரோனா பரவலை அந்நாடு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், நிலை 3 என்பதிலிருந்து நிலை 2க்கு தளர்த்தப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுகின்றன, பணியாளர்கள் அலுவலகங்களுக்குத் திரும்புகின்றனர். ரெஸ்டாரண்டுகள் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டை மீண்டும் துவங்குகின்றன.
இவைதவிர, பொழுதுபோக்கு மற்றும் போட்டிகளாய் நடத்தப்படும் விளையாட்டுகளும் மீண்டும் தொடங்கப்படவுள்ளன. நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் திறக்கப்படவுள்ளன.
அந்நாட்டில், பார்கள், மே 21ம் தேதி திறக்கப்படுகின்றன. அதேசமயம், திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட சமூக கூடுகை நிகழ்வுகளில் அதிகபட்சம் 10 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் இதுவரை, 15000க்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 15 முதலே அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன மற்றும் மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்நாட்டில், சுமார் 50 லட்சம் பேர் வாழ்கிறார்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில், அந்நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு அரசின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து உலகெங்கும் அச்சம் எழுந்துவரும் நிலையில், நியூசிலாந்தின் நடவடிக்கை பல மட்டங்களில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.