திருச்சி: அரிய மங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து  இரு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு பிறந்த நாளில் இந்த சோகம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, ஆம்பூர் அருகே புத்தாண்டையொட்டி கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர், லாரி விபத்தில் சிக்கியதில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீடு இடிந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம், கீழ அம்பிகாபுரம் பகுதியில் காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து   சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் படுத்து உறங்கி உள்ளனர்.இந்த நிலையில், இரவு அவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் இருந்துது யதார்த்தமாக பார்த்தபோது, மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியதுடன் அங்கு  வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பது தெரியவந்தது.  மேலும் இடிபாடுகளுக்குள் அங்கிருந்தவர்கள் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து  உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  அரியமங்கலம்  போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டதோடு,  உடனடியாக திருச்சியை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு  திருச்சி தீயணைப்பு துறையினர் ஈடுபாடுகளை அகற்றி, அதற்குள் சிக்கி இறந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அரியமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணையின்போது, இடிந்த விழுந்த வீடு 1972ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

அதுபோல, ஆம்பூர் அருகே புத்தாண்டையொட்டி கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர், லாரி விபத்தில் சிக்கியதில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன், இவர் நள்ளிரவு புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், ன் தனது மனைவி காவேரி மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபடத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

இவரது வாகனம், மாராப்பட்டு பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்வந்து கொண்டிருந்த போது, அதே சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி சிக்னல் ஏதும் செய்யாமல், சாலையைக் கடக்கத் திரும்பியுள்ளது. அதில் எதிர்பாரா விதமாகப் பரந்தாமன் லாரியின் பின்பக்கம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, லாரியின் பின்பக்க டயரில் இருசக்கர வாகனம் சிக்கியது. இதில் வாகனத்தில் 2 குழந்தைகள்  லாரி டயரில் சிக்கி உயிரிழந்தனர், உயிரிழந்த  குழந்தைகள் பெயர் கார்த்திகா ஸ்ரீ (9) மற்றும் பேரரசி (6) . மேலும், பரந்தாமன் மற்றும் அவரது மனைவி காவேரி, படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த 2 பெண் குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்ற போது விபத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.