சென்னை:  100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படை யில், இன்று முதல் (2024 ஜனவரி 1)  பணியாளர்களுக்கு ஆதார் அட்டை மூலம் சம்பள பட்டுவாடா செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100நாள் வேலை திட்ட பணியாளர்கள், அவர்களின் பணியாளர்  அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்ப தற்காக அவகாசம் முடிவடைந்த நிலையில்,  இன்று முதல் ஆதார் அட்டை மூலம் சம்பள பட்டுவாடா செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளார்கள்.  இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. அதாவது, பலர் பணிக்கு வராமலேயே சம்பளம் பெறுவதாகவும், மேலும் , பணியாளர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள சம்பளம் முழுமையாக வழங்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதனால், 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை செயல்படுத்த  கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.  அதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆதார் கார்டு மூலம் சம்பளம் பட்டுவாடா செய்யும் பணி இன்றுமுதல் தொடங்கி உள்ளது.

இதற்கிடையில், பல பகுதிகளில், 100நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையான பணிகள் வழங்கப்படுவது இல்லை என்றும், செய்த பணிக்கு   சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுக்கு  100 நாள் வேலை திட்டம் என்பது தற்போது படிப்படியாக குறைந்து இன்றைக்கு ஆண்டுக்கு 50 முதல் 60 நாட்கள் வேலை இருந்தாலே பெரிய விஷயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  பணி நாட்களில் பல மாநிலங்களில், நாளொன்றுக்கு ரூ.250 மட்டும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2022-23 நிதி ஆண்டில் தினசரி ஊதியம் 281 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2023-24 நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளம் 294 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இது ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ள மத்தியஅரசு,  ஒவ்வொருவரும், தங்களது பணியாளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசு  தற்போது கொண்டு வந்துள்ள  இந்த திட்டத்தின்படி  மொத்தமுள்ள  25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. ஏராளமானோர் முறைகேடாக இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.  இந்த சுரண்டலை தடுக்கும் வகையில், இன்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என அறிவித்து, இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.