சென்னை: 2024ம் ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற  வேண்டியதிருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.

ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநரை சந்தித்து உரையாடும்படி, முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இரு தரப்பும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக  அமர்ந்து பேசும்படி அறிவுறுத்தியது.

இந்த நிலையில்,  கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு கவர்னரை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிடப்பில் போடப்பட்டுள்ள 10 மசோதாக்கள் தொடர்பாக பேச உள்ளார். அத்துடன், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால், கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, ஆளுநர் அவையில் இருந்து இடையில் வெளியேறியதும், அதைத்தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன தீர்மானம் தெரிவித்ததும், பேரவையில் பொன்முடி பேசிய  நிலையில், தற்போது வேறு வழியின்றி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.