சென்னை: டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆரம்பத்தில் விவசாயத்தை விரும்பினார் என்று அவர் பயின்ற கல்லூரி முதல்வர் குருசாமி தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யப்படடுள்ள நடராஜன் சந்திரசேகரன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைக்குறிய விஷயம். பலருக்கு ஏதேனும் ஒரு விஷயம் திருப்பு முனையாக அமையும். அந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் பலர் உதாரணமாக திகழ்கின்றனர்.

இந்த வகையில், சந்திரசேகரும் தற்போது ஒரு பெரிய குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு, அவர் பயின்ற கல்லூரி முதல்வர் ஒருவர் காரணமாக இருந்துள்ளார் என்பது ருசிகர தகவலாக உள்ளது.

கோவை சிஐடி கல்லூரியில் பிஎஸ்சி அப்லையிடு சயின்ஸ் பயின்றவுடன், மேல் படிப்புக்கு எந்த பாடத்தை தேர்வு செய்யலாம் என்று 1983ம் ஆண்டில் அக்கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் குருசாமியிடம சந்திரசேகர் ஆலோசித்தார்.

விவசாயத்தை தேர்வு செய்ய இருப்பதாக சந்திரசேகர் உறுதியாக இருந்ததாக குருசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். நாமக்கல் மோகனூர் கிராமத்தில் சந்திரசேகர் குடும்பத்திற்கு விவசாய நிலம் இருந்தது. அப்போது வாழை சாகு படி செய்து கொண்டிருந்தனர். அந்த சமயம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவு ஆரம்ப கட்ட நிலையில் இருந்தது. எதிர்காலத்தில் இந்த துறைக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினேன். நான் கூறிய கருத்துக்களை ஏற்குமாறு சந்திரசேகரின் தந்தை நடராஜனும் வலியுறுத்தினார்.

அதனால், சந்திரசேகரால் வேறு எந்த படிப்பையும் பரிசீலனை செய்ய முடியாமல் போனது. எனினும் சார்ட்டர்டு அக்கவுண்டன்சியையும் சந்திசேகர் பரிசீலனை செய்தார். இறுதியில் எம்சிஏ தான் அவருக்கு அமைந்தது. இதையடுத்து திருச்சி ஆர்இசி (தற்போது என்ஐடிடி) கல்லூரியில் எம்சிஏ பயில அவர் தேர்வானார். ஆர்இசி.யின் எம்சிஏ முதல் பேட்ச் இவர் என்று குருசாமி தனது நினைவலைகளை முன்பே பகிர்ந்து கொண்டிருந்தார்.

சந்திரசேகரின் தந்தை நடராஜன் சட்டம் பயின்றுவிட்டு விவசாயத்துக்கு வந்தவர். தற்போது அவரது மகளுடன் ஈரோட்டில் வசிக்கிறார். 84 வயதாகும் அவர் கூறுகையில், நாங்கள் ஆலோசித்து தான் எம்சிஏ.வை முடிவு செய்தோம். சந்திராவின் கடின உழைப்பால் தான் இந்த நிலையை தற்போது அடைய முடிந்தள்ளது. சந்திராவின் தற்போதைய நியமனம் குறித்து டிவி.யில் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்தேன். உடனடியாக போனில் அழைத்தான். உன்னால் தான் இந்த பதவி உனக்கு கிடைத்தது என்று கூறினேன் என தெரிவித்தார். மோகனூரில் சாதாரண ஒட்டு வீட்டில் வசித்து, பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அரசுப் பள்ளியில் பயின்றவர்.

தமிழ் வழியில் பயின்ற அவர், கல்லூரியில் ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக் கொண்டார். சிறு வயது முதலே கடின உழைப்பை கொண்டவர். 2009ம் ஆண்டில் டிசிஎஸ் சிஇஓ.வாக பதவி கிடைக்க அவரது கடின உழைப்பு தான் காரணமாக அமைந்தது என்று அவரது உறவினர் அஜிதன் கூறினார்.

சந்திரசேகரின் பள்ளிப் பருவ நண்பரான நரேந்திரன் தற்போது எல்ஐசி ஏஜென்டாக இருக்கிறார். அவர் கூறுகையில், என்னை விட 2 வயது மூத்தவர். இதை அவர் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். கிரிக்கெட் விளையாடுவோம். அவர் அணியின் கேப்டன், துணை கேப்டனாக செயல்பட்டார் என கூறினார். ஜூனியர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார் என்றும், ஒழுக்கமான மாணவர் என்று அவரது பள்ளி ஆசிரியை அன்னலட்சுமி கூறினார்.

டாடா சன்ஸ் குழும தலைவரான சந்திரசேகரின் இந்த மலரும் நினைவுகளை பிரபல பொருளாதார நாளிதழான எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.