மும்பை:

கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பவுலர்களின் சில பந்துகள், அம்பயர்களால் நோபால் என சொல்லப் படுவதும்,  இது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள்  எழுவதும் வாடிக்கை. அதுபோல சில நேரங்களில் நோ பால் மூலம் விக்கெட்டுகளும் வீழ்ந்து விடும். இது சர்சைசகளை மேலும் அதிகப்படுத்தி விடும்.

இதுபோன்ற விவகாரங்களில், விக்கெட் விழும் போது அது நோபால் தானா என்று நடுவர்கள் ஆராய வேண்டுமென்ற விதியை ஐசிசி கொண்டு வரவேண்டுமென பிசிசிஐ வலியுறுத்தி வந்தது. தற்போது பிசிசிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்  ஆட்டத்தின்போது,  நடுவர்களின் தீர்ப்பு மிக முக்கியமானதாகும். நடுவர்களின் கவனக்குறைவு காரணமாக பல தவறுகள் ஏற்படுவது உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஐசிசி அவ்வப்போது புதிய விதிகளைஅமல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே  டிஆர்எஸ் முறைப்படி நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் ரிவியூ கேட்கலாம் என்ற விதி கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பல வீரர்கள் அவுட் ஆக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

அதுபோல, பந்துவீச்சின் போது நோ-பால் போடுவதை நடுவர்கள் கவனிக்காமல் இருப்பது பல முறை டிவி ரிப்ளேவில் தெரிய வரும். இது சர்சையாகும். அதுபோல, பேட்ஸ்மேன்கள் அவுட்டாகும் போது, நோ-பால் என்ற சந்தேகம் வந்தால் மூன்றாவது நடுவரிடம் ஆலோசிப்பார்கள்.  அதையும் மீறி சில சமயம் கவனக்குறைவு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என்று நடுவர்கள் ஆராய வேண்டுமென்ற விதியை ஐசிசி கொண்டு வரவேண்டுமென பிசிசிஐ சில காலமாக வலியுறுத்தி வந்தது.

தற்போது, பிசிசியின்  வேண்டுகோளை ஏற்றுள்ள ஐசிசி முதல்கட்டமாக  இந்தியாவில் நடை பெறும் உள்ளூர் போட்டிகளில் இந்த நடைமுறை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன் செயல்பாடுகள் தெரிந்த பின்னர், சர்வதேச போட்டிகளிலும் இந்த விதியை பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.