மும்பை: மகேந்திர சிங் தோனிக்கு, உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி ஆட்டம்தான் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், தனது ஓய்வு முடிவு குறித்து அவர் இன்னும் எதையும் அறிவிக்கவில்லை.

தற்போது 38 வயதாகும் தோனியுடன், இந்திய அணியின் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் கலந்துரையாடலை மேற்கொண்டார். கலந்துரையாடல் றித்து விரிவாக எதையும் பிரசாத் அறிவிக்காதபோதும், “என்னிடம் நீண்டகால திட்டங்கள் எதுவுமில்லை. உங்கள் விருப்பத்தின்படி நீங்கள் செயல்படுங்கள்” என்று தோனி கூறிவிட்டதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்‍பை கிரிக்கெட் போட்டியை மனதில் வைத்து தனது ஓய்வு முடிவை தோனி இன்னும் அறிவிக்காமல் உள்ளார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

“தோனி இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை. மிகச்சிறந்த வீரரான அவருக்கு எப்போது ஓய்வுபெற வேண்டுமென்பது தெரியும். நாங்கள் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளோம். எப்போது ஓய்வுபெற வேண்டுமென்பது தோனியின் முழு விருப்பம்” என்று தெரிவித்துள்ளார் பிரசாத்.

பிராந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்காக, 2 மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ள தோனி, மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், இந்திய அணி தேர்வர்கள், தோனியின் இடத்தில் ரிஷப் பண்ட்டை வைத்து அதிக பயிற்சியளிக்க முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.