டெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து பழைய பாட்டத்தின்படி தேர்வு நடைபெறும் என்றும், புதிய பாட்டத்தின்படி நடைபெறும் தேர்வு 2022-23க்குஒத்தி வைக்கப்படுவதாக நீதி மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (எஸ்எஸ்) தேர்வு என்பது முதுநிலை மருத்துவ மாணவர்களுக்காக நடத்தப்படுவது. இதில் மொத்தமாக 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு அந்தந்த பிரிவுகளிலிருந்தே பெரும்பாலான கேள்விகள் வரும்.   பொது மருத்துவ பிரிவிலிருந்து குறைவான கேள்விகளே கேட்கப்படும். இது தான் நீண்ட காலமாகப் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தாண்டு ஜூலை மாதம் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமைகள் (என்டிஏ) வெளியிட்டது. ஆனால், பின்னர் கடைசி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாக அறிவித்தது. அதன்படி நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நீட் எஸ்எஸ் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மத்தியஅரசின் அறிவிப்பு காரணமாக, தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  மொத்தம் 41  மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் DY சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் BV நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் காலியாக இருப்பதால் தான் பாடத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர்.  மாணவர்களின் நலனை விட தனியார் கல்லூரிகளின் நலன் தான் முக்கியமாக தெரிகிறதா என கேட்ட நீதிபதிகள், மாணவர்கள் ஒன்றும் நீங்கள் உதைத்து விளையாடு வதற்கு கால்பந்து அல்ல என கோபமாக தங்களது அதிருப்திகளை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான  முடிவை இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி,  அடுத்த கல்வியாண்டில் (2022-23) இருந்து நீட் தேர்வு  செயல்படுத் மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

இந்த வருடம்  பழைய பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வுகள் நடைபெறும் என்று உறுதியளித்தார்.