பனாஜி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மீன்வளத்துறைக்கென்று ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள கோவா மாநிலத்திற்கு வருகைதந்த ராகுல் காந்தி, மீனவ அமைப்புகளிடையே பேசும்போது இதை தெரிவித்தார்.

தற்போது, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய மூன்று பிரிவுகளும், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ்தான் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான், மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலனுக்கென்று தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதை நிச்சயம் நிறைவேற்றி தருவதாக காங்கிரஸ் தலைவர் உறுதியளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மீனவர் நல்வாழ்விற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், 2019ம் ஆண்டிற்கான கடலோர பாதுகாப்பு மண்டல அறிவிப்பையும் ரத்துசெய்ய வேண்டுமென ராகுலிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி