பெங்களூரு:

லிங்காயத்தை தனி சிறுபான்மை மதமாக அங்கீகரித்து கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஜகதிகா லிங்காயத் மகாசபா தலைவர்கள், அமைச்சர்கள் பட்டீல், சரன் பிரகாஷ் பதி, வினய் குல்கர்னி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘ஒரு நூற்றாண்டிற்கு பின்னர் லிங்காயத் சமுதாயம் மத அந்தஸ்தை திரும்ப பெற்றுள்ளது. 1881ம் ஆண்டு லிங்காயத் தனி மதமாக இருந்துள்ளது என்பது மைசூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் இந்து மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜமாதார் இந்த இயக்க தலைவர்களில் ஒருவர். அவர் கூறுகையில், ‘‘ சதி செயல் காரணமாக லிங்காயத் தனி மத அந்தஸ்தை 1881ம் ஆண்டு இழந்தது. கன்னட மண்ணின் சொந்த மதத்துக்கு 12ம் நூற்றாண்டில் புது வாழ்வு கிடைத்துள்ளது. இச்சமுதாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றார்.

அகில பாரத வீர சைவ மகாசபா அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து படீல் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. தனி மத அந்தஸ்து என்பது நீண்ட நாள் நோக்கம். எனினும் சிறுபான்மை அந்தஸ்துடன் கூடிய தனி மத அந்தஸ்து கிடைத்தது தற்செயலானது.

மாநில அரசின் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகா அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்பதன் மூலம் எந்த இழப்பும் ஏற்படபோவது கிடையாது. இதற்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் இதர சிறுபான்மையினர் உரிமை மற்றும் நலன் பாதிக்காது’’ என்றார்.

இதேபோல் லிங்காயத் மடாதிபதிகளான சித்ரதுர்கா பிரிகான் மடத்தை சேர்ந்த சிவமுர்த் முருக ஷார்னாரு, கடாக் தொன்டதார்யா மடத்தை சேர்ந்த சித்தாலிங்க சுவாமி, நாகனூர் ருத்ரக்ஷி மடத்தை சேர்ந்த சித்தாராமா சுவாமி ஆகியோர் கர்நாடகா அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.