டில்லி:

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் கடத்தி கொல்லப்பட்ட 39 பேரும் இந்தியர்கள் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் நிரூபணமாகியுள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘39 பேரது டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதனைக்காக பாக்தாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 38 மாதிரிகள் ஒத்துபோயுள்ளது. மீதமுள்ள ஒருவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 38 தொழிலாளர்களின் உடல்கள் விரைவில் இந்தியா கொண்டு வரப்படும். மீதமுள்ள ஒரு உடல் மட்டும் அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடக்கிறது’’ என்றார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘‘மொசூலில் மாயமான தொழிலாளர்களை கண்டுபிடித்து, அவர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வரும் முயற்சியில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை. சுஸ்மா சுவராஜ், வி.கே.சிங் ஆகியோர் கடுமையாக பாடுபட்டனர்’’என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் 7 முறை தவறாக வழிநடத்தியுள்ளார். 39 பேர் மரணத்துக்கு காங்கிரஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. உலகமே அவர்கள் இறந்துவிட்டனர் என்று கூறியபோது, இந்திய அரசு மட்டும் அவர்கள் உயிருடன் இருப்பதாக கூறியது. இதயமற்ற செயல்களின் எல்லையை மோடி அரசு தாண்டிவிட்டது’’ என்றார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘இச்செயலை மன்னிக்க முடியாது. 39 இந்தியர்கள் ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை தனிப்பட்ட முறையில் அறிய முடியாமல் தொலைக்காட்சி செய்தி மூலம் உறுதிபடுத்த வேண்டிய நிலை அவர்களின் குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக இந்த செய்தி வெளியாவதற்கு முன்பு வெளியுறவு துறை மூத்த அதிகாரிகள் 39 பேரின் குடும்பத்தாரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில்,‘‘39 இந்தியர்களின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி அளிக்க வேண்டும்’’ என்றார்.