புதுடெல்லி: ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், அந்நிறுவனமும் சீல் வைக்கப்படாது என்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை தவறாகப் பயன்படுத்தி, எந்த உற்பத்தி அல்லது வணிக நிறுவனத்திற்கும் தீங்கிழைக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நிறுவன உரிமையாளரை சிறையில் அடைத்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கலாம்.

* இதுபோன்ற சூழலில், அந்த நிறுவனத்தின் வளாகம், 3 மாதங்களுக்கு சீல் வைக்கப்படலாம்.

* பாதுகாப்பு விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாத சூழல் கண்டறியப்பட்டால், நிறுவனம் 2 நாட்களுக்கு மூடப்பட்டு, பின்னர், விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதிசெய்த பிறகு திறக்க அனுமதித்தல்.

மேற்கண்ட அம்சங்கள்தான், வழிகாட்டு நெறிமுறைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.