சென்னை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நாடெங்கும் தினசரி கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.7 லட்சத்தைத் தாண்டி உள்ளது.  இது மூன்றாம் அலை பரவல் என அஞ்சப்படுகிறது.  இதையொட்டி அரசு புதிய வழி காட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளன.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றில் எது இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  மேலும்  இணை நோய்கள் இருந்தாலும் 60 வயதைத் தாண்டி இருந்தாலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்குக் குறைவாக இருந்து அறிகுறிகள் இல்லாவிட்டால் பரிசோதனை கட்டாயம் இல்லை.  கொரோனா உறுதியாகி சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டுத் தனிமையில் உள்ளோர் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 ஆம் நாள் சோதனை இன்றியே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.