சேலம்

ரத்தடியில் பாடம் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு 2500 புதிய வகுப்பறை அமைக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நேற்று சேலத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அமைச்சர் தனது பதிலில்,

“தற்போது தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது., இந்த ஆண்டு இந்த  பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.  இதில்  பேராசிரியர் அன்பழகனார் அறக்கட்டளை சார்பில், முதற்கட்டமாக மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்களுக்காக 2,500 புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு துவங்கி உள்ளது. தவிர 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அருகே உள்ள பாலாஜி கல்லூரியில் நேரடி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அந்த பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டருக்குள் உள்ள எந்த பள்ளிகளிலும் சேரலாம். ” 

எனத் தெரிவித்துள்ளார்.