டில்லி:

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு பாஜக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. நாகாலாந்திலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மேகாலயாவை மட்டும் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேகாலயாவில் 2வது பெரிய கட்சியாக கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசிலும், ராஜஸ்தான், மணிப்பூரிலும் தேசிய மக்கள் கட்சி பாஜக.வுடன் கூட்டணி வைத்துள்ளது.

ஆனால், மேகாலயாவில் பாஜக.வுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது. தற்போது இங்கு எதிர்கட்சியாகும் தகுதி தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால், அரசில் சேரும் படி காங்கிரஸ் அழைப்பு விடுத்து, அதை ஏற்றுக் கொண்டால் பாஜக இங்கு எதிர்கட்சியாகும்.

மேகாலயா காங்கிரஸ் அரசில் தேசிய மக்கள் கட்சி இணைந்தால், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி ஆதரவுடன் அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது.

பாஜக.வின் பைரன் சிங் முதல்வராக பதவி ஏற்றார். தேசிய மக்கள் கட்சி சார்பில் வெற்றி 4 பேரில் 3 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் 4 பேரின் ஆதரவில் தான் மணிப்பூர் ஆட்சி பிழைத்துக் கொண்டிருக்கிறது. 28 எம்எல்ஏ.க்களுடன் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக இங்கு வெற்றி பெற்றது.

மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியில் தேசிய மக்கள் கட்சி பங்கு பெற்றால் மேகாலயாவில் பாஜக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை தேசிய மக்கள் கட்சி வாபஸ் பெற நேரிடும். இதனால் அங்கு பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.