மீபத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.  “அதீத மதுப்பழக்கம் காரணமாகவே, கல்லீரல் பாதிக்கப்பட்டு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. நோய் வந்தபிறகும் மது அருந்தியதால் மரணமடைந்தார்” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் உட்பட பலர் சமூகவலைதளங்களில் எழுதிவருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசசன், “தன்னலம் பேனா தற்கொலை” என்று வருத்தத்துடன் தனது அஞ்சலியை பதிவு செய்தார். பாடலாசிரியர் வைரமுத்துவும் இதே தொணியில் தனது கருத்தைத் தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், “மறைந்துவிட்ட ஒருவரின் மரணத்தை ஏன் ஆராய வேண்டும். மதுவால் அவர் இறந்திருந்தாலும், இதை சொல்வதால் நாளை அவரது பிள்ளைகள் மனம் புண்படாதா” என்றும் பலர் வாதங்களை வைக்கிறார்கள்.
a
இதற்கு பதில் சொல்வது போல  தென்றல் சிவக்குமார் (Thendral Sivakumar) அவர்கள், முகநூலில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
“ ஒரு மனிதனின் மரணத்துக்கான காரணத்தை வேறாரும் தெரிந்து கொள்ளவோ ஆராயவோ தேவையில்லை… அதற்கான முழுமுயற்சியில் ஈடுபடுவதும் தேவையற்றதுதான்.. ஆனால் அவன் பிள்ளைகள் அதனை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்…
தந்தை/தாய் இருவரில் யாரை இழந்த பிள்ளைகளானாலும் அந்த இழப்பின் பின்னணியை வெறுக்கவும், ஒதுக்கவும் விழைவர் என்பது எளிய உளவியல்தானே.. அவர்கள் ஒரு பிம்பத்தைப் பார்த்துத்தான் வளரப்போகிறார்கள் என்றானபின் அந்தப் பிம்பத்தை அழகாய்க் காட்ட நினைப்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான்..
ஆனால் உண்மையாய்க் காட்டுவதுதானே சரியானது… இவை எல்லாம் கடந்த சில நாட்களாக என் மனத்தில் சுழலும் எண்ணங்கள்…
நிற்க, எனக்கும் நா.முத்துக்குமாரின் மரணத்துக்கான காரணம் தெரியாது… தெரியவும் வேண்டாம்…
ஆனால் என்றேனும் ஒரு நாள் சந்திக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்ட ஒருகைவிரல்கள் விட்டு எண்ணக்கூடிய மனிதர்களுள் அவனும் ஒருவன். “அவர்” என்று இப்போதுகூட சொல்லவியலாத அளவுக்கு அன்பும் மதிப்பும் உண்டு…
எத்தனையோ வரிகள் இணையத்தில் இந்தச் சில நாட்களாக உலவுகின்றன… என்னை எப்போதும் கண்ணீரில் ஆழ்த்தும் வரி “பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்…” அடுப்பில் உலையேற்றும் முன் அடுத்த வீட்டை நினைக்கும் பெண்மையின் நிலையிலிருந்து இவ்வுலகைப் பார்த்தவன்…
ஆனால், அவன் மரணத்துக்கு மதுதான் காரணமாயிருக்குமேயானால் அதனை முன்னெப்போதையும்விட இப்போது நான் வெறுக்கிறேன்.. அவனை எப்படி வெறுக்க முடியும்…?? அவன் பிள்ளைகளும் இப்படித்தான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்…”