மறக்கமுடியாத மகேந்திரன்.. – நெட்டிசன் பதிவு

Must read

மறக்கமுடியாத மகேந்திரன்.. – நெட்டிசன் பதிவு
ஒவ்வொரு ஆண்டும் இதேநாள் காலையில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவோம், நன்றி தெரிவித்துவிட்டு அவ்வளவு உற்சாகமாக பேசுவார்.
ஜாம்பவான் என்ற நினைப்பே இல்லாமல் ஏதோ வாய்ப்பு தேடி புதிதாக சாதிக்க துடிக்கும் இளைஞனைப்போல் பேசுவார்.
சாதனையாளர்களில் இருவகை உண்டு, ஒன்று தானே நிறைய சாதிப்பது. இன்னொன்னு நிறைய பேர் சாதனை படைக்கும் வகையில் விதைகளை தூவிவிடுவது.
இந்த ரகத்தில் செயல்பாடுகளும் படைப்புகளும் கொஞ்சமாகத்ததான் இருக்கும். ஆனால் வீரியம் மிக்கவை.
இயக்குநர் மகேந்திரனும் குறைந்தபட்ச பங்களிப்பில் அப்படிப்பட்ட விதைகளை தூவியவர்தான்.
இயக்கிய படங்கள் 12 தான்…ஆனாலும் ஒவ்வொன்றும் காலத்தால் அழியா சிற்பங்கள்.
மிகைப்படுத்தல் சினிமாவை, இயல்பு காட்சிகளால், எளிமையான பாத்திரங்களால் மாற்றிப்போட்டு விளையாடிய அற்புதமான கலைஞன் இயக்குநர் மகேந்திரன்..
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நண்டு ஜானி என விதவிதமான ரகங்கள்.
அதிலும் பூட்டாத பூட்டுக்கள் படம். பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற சிறுகதையை திரையில் சொன்ன விதம் வித்தியாத்திலும் வித்தியாசமானவை..
உலகத்தில் மிகவும் சிக்கலான ஆண் பெண் உறவு எங்கே எப்போது உன்னதமடையும், உடைந்து தடம்மாறும் என்பதை அடிப்படையாகக்கொண்டு எழுதிய சிறுகதை என்று பொன்னீலன் தெரிவித்திருந்தார்.
அப்படிப்பட்ட கதைக்களத்தில் தேவையற்ற கற்பனைகளை பாத்திரங்கங்கள் மேல் கலக்கவிடாமல் உள்ளது உள்ளபடி என்பார்களே அப்படி எடுத்தார் மகேந்திரன்..
அடிதடி ஆக்சன் என மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராய் கொடி பறந்த நடிகர் ஜெகனை, தமிழ் சினிமாவில் அதுவும் தடம் மாறும் மனைவியால் அவதிப்படும் கணவனாய் உப்பிலி என்ற பாத்திரத்தில் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.
பின்னாளில் தனக்கு ஜோடியாய் கோவை சரளாவை தேர்ந்தெடுத்ததன் முதல் வெர்ஷன் என்றே சொல்லலாம்..
திருமணமாகியும் கிராமத்தில் இளவட்டமாய் பெண்கள்மேல் பித்துப்பிடித்து அலையும் நாயகன். ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. என்பதால் மனைவி எப்போதும் வேதனையில் துடிப்பார் அந்த வேதனையே இன்னொருவன் மேல் குழந்தை வரத்திற்காக ஈர்ப்பாகமாறி தடம்மாறி ஓடிப்போய்விடுவாள்.
மனைவியின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவளை மீண்டும் அழைத்துவந்து வாழ முற்படுவான். அவள் ஊருக்குள் திரும்பி வந்து வாழ ஊரே எதிர்க்கும். கடைசியில் மனைவிதான் முக்கியம் என்று அவளோடு நாயகனே ஊரைவிட்டு வெளியேறிவிடுவான். படத்தின் காட்சிகளை வர்ணிக்க இங்கே இடம் போதாது.
சாம்பிளுக்கு ஹாஜா செஃரீப் சிறுவன் பாத்திரம். குழந்தை பாக்கியம் இல்லாததால் தேடிப்பிடித்து, வளர்ப்பதற்காக ஏழெட்டு வயதுள்ள சிறுவன் காஜா ஷெரிப்பை வீட்டுக்கு கூட்டுகிட்டு வருவார் ஹீரோ ஜெயன். வீட்டில், கட்டிய மனைவி உள்ளிட்ட பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
இதையும் மீறி சிறுவனை வளர்க்க ஆரம்பிப்பார்.
ஆனால் சிறுவனோ, அந்த வீட்டில் உள்ள முப்பது வயது வேலைக்கார பெண்ணை திருட்டுத்தனமாக பார்க்க முற்படுவான். குளிக்கும்போது, கிணற்றில் நீர் அள்ளும்போது, பாத்திரம் துலக்கும்போது என அந்த பெண்ணின் முக்கிய இடங்களை ஜாடைமாடையா பார்ப்பதையே வேலையாககொண்டு திரிவான்.
சிறுவனாக இருந்தாலும் அவனின் திருட்டு பார்வையில் உடம்பு கூசவே, உஷராகும் வேலைக்கார பெண்.வீட்டு எஜமானியிடம் சொல்வாள். சின்ன பையனா இருந்துகிட்டு பெரிய மனுஷன் பண்ற சேஷ்டையெல்லாம் செய்துன்றது விஷயம் அவள் கணவனுக்கு போகும்.
மகனாக வளர்க்க கொண்டு வந்தால் இந்த நாய் பெரிய பொம்பளைங்களை பெண்டாளவே நினைக்குதேன்னு நொந்துபோய், உடனே சிறுவனை அடித்து துரத்திவிடுவார் ஹீரோ.
மலையாள சூப்பர்1டார் ஜெயனைபற்றி இங்கே குறிப்பிட்டு சொல்லியாகவேண்டும். 1970களில் அவர்தான் கேரள இளைஞர்களுக்கு ஸ்டைல் மன்னன். கப்பல் படை அதிகாரி வேலையை உதறிவிட்டு சினிமாவில் ஐக்கியமானவர்.
சண்டைக்காட்சிகளில் அப்படியொரு அசத்தல் ரகமாய் செயல்படுவார் அதுவே அவருக்கு 1980 ஆம் ஆண்டு எமனாக போய்விட்டது. சண்டைக்காட்சியின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரில் சாகசம் செய்யவேண்டும்.
டூப்பே போடாமல், சென்னை சோழவரம் பகுதியில் நடித்தார். ஷாட் ஓக்கே என்றாலும் இல்லை இன்னொரு முறை போகலாம் என்று ரீடேக் கேட்டு வாங்கி பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிய ஜெயன் தவறி கீழே விழ அந்த கலைஞனின் உயிர் மேலே பறந்தது..
இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாளான் இன்றைய ஜுலை 25 தான், நடிகர் ஜெயனுக்கும் பிறந்தநாள். பூட்டாத பூட்டுக்கள் உப்பிலியும் இன்று நம்மிடம் இல்லை. உப்பிலியை படைத்த மகேந்திரனும் இன்று நம்மிடம் இல்லை..
மகேந்திரன் அவர்களை நினைக்க நினைக்க அப்படியே மனசு அவரின் ஆரம்ப காலத்தை நோக்கி ஓடுகின்றது.
1960-களில்ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் முத்துராமன் படங்க ளுக்கு கதை எழுதியவருக்கு ஒரு பெரிய பிரேக்கை தந்த படம் 1974-ல் நடிகர் திலகத்தின் தங்கப்பதக்கம் படம்.
சினிமாவில்போலீஸ் நாயகன் என்றால் இன்றளவும் முதலில் ஞாபகத்திற்கு வரும் எஸ்.பி. சௌத்ரி துவம்சம் செய்த தங்கப்பதக்கம் படத்தின் கதையும் வசனமும் இவருடையதே.
கமல்-ரஜினி நடித்த ஆடு புலி ஆட்டம் படத்திற்கு மகேந்திரன் எழுதிய வசனங்கள், பிரமிப்பானவை. ‘’டேய் ‘கொள்ளை அடிப்பதைவிட குடும்பம் நடத்துறது ரொம்ப ஆபத்தான விஷயம். ” என்று கொள்ளையனாய் ரஜினி பேசும் டயலாக். இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது..
கதை, திரைக்தை, வசனகர்த்தா என சுழன்றவருக்கு,1978 ஆம் ஆண்டு முதல்முறையாக இயக்குநர்
அவதாரம்.
ரஜினி என்ற கறுப்பு வைரத்தை முள்ளும் மலரும் படத்தில் காளி என்ற பாத்திரத்தில் காட்டிய விதம்…முள்ளும் மலரும்…அது ஒரு மேஜிக்..
பொதுவாக படங்களில் சில முக்கிய பாத்திரங்கள் தங்கள் நிலைப்பாடுகளை இடையிலேயோ, கடைசியிலேயோ மாற்றிக்கொள்ளும்.. ஆனால் இங்குதான் முள்ளும் மலரும் வித்தியாசப்பட்டு போய் நிற்கும்
விஞ்ச் ஆப்ரேட்டர் காளி என்கிற ரஜினிக்கு இஞ்சினியர் குமரன் என்கிற சரத்பாபுவை பிடிக்கவே பிடிக்காது
காளி தங்கையான வள்ளி என்கிற ஷோபாவுக்கு இஞ்சினியர் குமரனை பிடிக்கும் ஆனால்.காளியின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருப்பார்.
குமரனோ, வள்ளியை மணந்தே தீருவதில் உறுதிபாய் இருப்பார். காளியின் வெறுப்புக்காக பயந்து வள்ளியைைவிட்டு வேறு திசையில் போகமாட்டார்.
நல்ல எஞ்சினியர் மாப்பிள்ளையை வெறுக்கும் கணவன் போக்கு பிடிக்காத காளியின் மனைவி மங்கா, தன் வாழ்க்கையே பறிபோனாலும் வள்ளியையும் குமரனையும் சேர்த்து வைப்பதில்தான் திடமாய் இருப்பார்..
கிளைமாக்சில்,, வள்ளியை குமரன் கரம்பிடிப்பார்.
உற்றுநோக்கினால், நான்கு பாத்திரங்களும் கடைசி வரை தங்களை மாற்றிக்கொள்ளவே கொள்ளாது.
கணவன் காளியின் பிடிவாதம் பற்றி தெரிந்தாலும் மனைவி மங்கா, முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார்.
அண்ணனை மீறி தங்கையானவள், காதலினிடம் மாங்கல்யம் பெற மாட்டார். திருமணத்திற்கு சம்மதித்தாலும் காளி, அதன்பிறகும் குமரனை தனக்கு பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்.
இப்பவும் சொல்றேன், எனக்கு உங்களை பிடிக்கலை சார்.. ஆனா என் தங்கச்சிக்க உங்கள பிடிக்குது சார் என ஒற்றை கையுடன் வாழும் அந்த காளி பாத்திர சொல்ல, படம் முடியும்..
படத்தில் எல்லோரையும்விட வெற்றிபெறுவது, தங்கை மீது அண்ணன் வைத்திருக்கும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை இன்னும் வலுவாக்கி திருப்பி கொடுத்தே, தான் விரும்பியதை பெற்று செல்வாள் தங்கை..
மக்கள் திலகம் எம்ஜிஆரின் வற்புறுத்தலால் சினிமா உலகின் மீது கவனத்தை பதித்த மகேந்திரன், எம்ஜிஆருடன் தன்னால் தன்னிச்சையாக தனக்கான திரை மொழியில் பயணிக்கமுடியாது என்று நினைத்து கடைசிவரை விலகியே இருந்தார்.
எம்ஜிஆருக்காக பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதை வடிவமாக்கும் மகேந்திரனின் முயற்சி கைகூடியிருந்தால் இந்த நிலைமை மாறியிருக்கும்.
ஜாம்பாவன்கள் வாழ்க்கையில்தான் எவ்வளவு விந்தைகள்.
ThanX : Elumalai Venkatesan

More articles

Latest article