நெல்லை:
நெல்லையப்பர் கோயிலின் மேற்கு வாயில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப் பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், கடந்த 2004 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்கள், பாதுகாப்புக் கருதி மூடப்பட்டன. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடந்த 17 ஆண்டுகளாக வடக்கு தெற்கு மற்றும் மேற்கு வாசல் கதவுகளும் பூட்டியே கிடந்தன. முக்கிய திருவிழா நேரங்களில் மட்டும் அந்த கதவுகள் திறக்கப்படும்.

இந்நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில், நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில், பூட்டிக்கிடக்கும் வடக்கு மற்றும் மேற்கு வாசலை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாசல்களைத் திறக்க அவர் உத்தரவிட்டார். இந்த வாசல்கள் திறக்கும் நிகழ்வு இன்று நடந்தது.

முன்னதாக, கோயில் யானை காந்திமதி வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு கோயிலின் நான்கு வாசல் களும் திறக்கப்பட்டதால், பக்தர்கள் அந்த வழியை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தர்கள், வாயில் திறந்தவுடன் மகிழ்ச்சி யுடன் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மூடப்பட்ட நெல்லையப்பர் கோயிலின் 3 வாசல் கதவுகள், 17 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டதால், பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.