சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதற்கிடையில் இன்று 3வது நாளாக கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த கல்குவாரியானது முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும், சபாநாயகர் அப்பாவுவின் உறவினருக்கு சொந்தமானது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அதிகாரிகளின் மெத்தனம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேசிய பேரிடர் மீட்பு குழு வினர் 30 பேர் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் முதலில் , முருகன், விஜய் ஆகிய இரண்டு பேரை  உயிருடன் மீட்கப்பட்டனர்.  ஆனால், 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இதனிடையே இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி நேற்று  இரண்டாவது நாளாக நடந்து வந்தது. மதியம் சுமார் 1.45 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்க முயற்சித்த போது மீண்டும் கற்கள் சரிந்து விழுந்ததால் 2 மணி நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

பின்னர், தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியின் அருகில் ஈடுபாடுகளில் சிக்கி கிடந்தவரை இரவு 10.45 மணி அளவில் 47 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்டனர். அவரை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டிய நிலையில் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும் நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். லாரி கிளீனராக வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. மீட்கப்பட்ட அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முருகன் உடல் மீட்கபட்டதுடன் மீட்பு பணி முடித்துக் கொள்ளப்பட்டு இன்று காலையில் மீட்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த திரு.பரமசிவன் என்பவரின் மகன் திரு.முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு.செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்