சென்னை: வரும் 24ந்தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்பட உள்ள நெல்லை டூ சென்னை வந்தேபாரத் ரயிலின் தினசரி சேவை 25ந்தேதி  (திங்கட் கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ரயிலின்   பயண கட்டண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் — விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் (24ந்தேதி)  பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.  முன்னதாக, நேற்று சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஒட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின்போது,  அதிகபட்ச மாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த வந்தேபாரத் ரயில், முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் உணவு மற்றும், குஷன் இருக்கையுன், நீல நிறத்துடன் கண்ணை கவரும் வகையில் உள்ளது. இதில், 8 பெட்டிகள் மட்டுமே  இடம்பெற்றிருக்கும்.  இந்த ரயிலானது, திருநெல்வேலியில் இருந்து தினமும் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும்; மதியம் 1:50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.  சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மதியம், 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு, 8.30 மணி நேரத்தில் செல்ல முடியும். இதே தடத்தில் செல்லும் மற்ற விரைவு ரயில்களை ஒப்பிடுகையில், மூன்று மணி நேரம் வரை பயண நேரம் குறையும்.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து, ஏசி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும்,

உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து சேர் கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய   ரயில் பெட்டிகள்( வேகன்கள்)  தலைமைப் பொறியாளா் முகுந்த், திருநெல்வேலி-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையின் தொடக்க விழா செப். 24ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சென்னை- திருநெல்வேலி இடையிலான 650 கி.மீ. தொலைவை 7.50 மணி நேரத்தில் கடக்கும். இன்னும், இந்த ரயிலின் வேகத்தை 130 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த ரயிலில் 52 போ் வரை பயணிக்கக்கூடிய ஒரு ‘எக்ஸிகியூட்டிவ்’ பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 போ் பயணிக்கலாம். ரயில் என்ஜின் உள்ள பெட்டியிலும் 46 போ் வரை பயணிக்க முடியும். தற்போதைய நிலையில் 540 போ் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம்.

இந்த ரயிலானத,  விருதுநகா், மதுரை , திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும், திங்கள்கிழமையில் இருந்துதான் முறைப்படி இயக்கப்படுகிறது.

வந்தேபாரத் ரயிலில் ஒலிப் பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவுப் பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள், இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்றாா்.

இந்த ரயில்  திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையை சென்றடையும். மறு மாா்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வாரத்தில் 6நாள்கள் இந்த ரயில் இயங்கும்;   ஒருநாள் மட்டும் இயக்கப்படாது.

சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று மீண்டும்  நடைபெறுகிறது. திருநெல்வேலியில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 மணிக்கு சென்னையை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ரயில் தொடக்க விழா 24ந்தேதி எத்தனை மணிக்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. 24ம் தேதி, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பின்னர், இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார். அதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

தீபாவளி, பொங்கல் மற்றும் விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை நேரங்களில் நெல்லை-சென்னை இடையே தனியார் பஸ்களின் டிக்கெட் விலை ரூபாய் இரண்டாயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்படும் நிலையில்,    பஸ் டிக்கெட் விலையை விட வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது. அதை நேரம் பயண நேரமும் குறைவாக இருப்பது பொதுமக்களிடைய பெரும் வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.