சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு கோரிக்கைக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காததால், தமிழ்நாட்டில் இந்த வருடம் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனை கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கவும், தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கவும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு சாத்தியமில்லை. இதனால் மாணாக்கர்கள் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது  நிறுத்தப்படாது. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

பொங்கல் விடுமுறை காரணமாக இந்த வாரம் சனிக்கிழமை சனி, ஞாயிறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படாது. தற்போது வரை தடுப்பூசி முகாம்கள் மூலமாக 3 கோடியே 22 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 ஆயிரத்து 51 பேருக்கு பூஸ்டர் தடுப்பு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 75% தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.