சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,   தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் 1வது பிரதான சாலையில் ஒரு மேம்பாலமும்,  கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பு – ஸ்ட்ரான்ஸ் சாலையில் 2வது மேம்பாலமும்,  கணேசபுரத்தில் தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு பதிலாக மூன்றாவது மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடசென்னையின் வாசலாக திகழும் கணேசபுரம் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்லாண்டு காலமாக வடசென்னை மக்கள் சந்தித்து வரும், போக்குவரத்து நெரிசல், மழை காலத்தில் தண்ணீர் தேங்குவது போன்றை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  சென்னை மாநகர மேயராக இருந்தபோது மாநகராட்சி சார்பில் அடையாறு, காந்திமண்டபம், ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகடமி, ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர், பீட்டர்சாலை (சரவணபவன்), பீட்டர்சாலை (இராயப்பேட்டை மருத்துவமனை), எழும்பூர் மியூசியம் அருகில், புரசைவாக்கம் டவுட்டன், பெரம்பூர் ரயில்வே ஸ்டேசன் ஆகிய இடங்களில் 10 பெரிய மேம்பாலங்கள் (இதில் பெரம்பூர் மேம்பாலம் அடுத்தமுறை வந்த கழக ஆட்சியில் கட்டப்பட்டது) முடிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து,  5வது முறையாக மறைந்த கருணாநிதி,  முதல்வர் பொறுப்பேற்ற போது சென்னையில் மேலும் 1) ஜி-கே.மூப்பனார் மேம்பாலம் 2) கோமதி நாராயண செட்டித் தெருவில் மேம்பாலம் 3) கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் அருகில் அமைந்துள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் 4) தியாகராய நகரில் குமரன் ஸ்டோர்ஸ் அருகில் உள்ள மேம்பாலம் ஆகிய 4 மேம்பாலங்கள் கட்டப்பட்டன.  திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 1. மீனம்பாக்கம் சாலை மேம்பாலம் 2. கத்திபாரா பெரிய பாலம் 3. கோயம்பேடு மேம்பாலம் 4. பாடியில் உள்ள மேம்பாலம் 5.புழல் மேம்பாலம், 6. பூவிருந்தவல்லி மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.

வேளச்சேரி அருகில் காமாட்சி மருத்துவமனை அருகில் கட்டப்பட்ட மேம்பாலம். ஆகிய மொத்தம் 22 மேம்பாலங்கள் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய பேருதவிகளாக உள்ளன.  மேலும் 68 கோடி ரூபாய் செலவில் துரைபாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம் மற்றும் 72 கோடி ரூபாய் செலவில் குரோம்பேட்டை எம்.ஜ.டி மேம்பாலம் அமைக்கப்பட்டன.

மேலும் 2006-11 திமுக ஆட்சியில் ரூ.34.72 கோடி செலவில் போரூரில் மேம்பாலம், ரூ. 49.55 கோடி செலவில் மூலக்கடை பகுதியில் மேம்பாலம். அண்ணாநகர்  2வது நிழற்சாலை மற்றும் திருமங்கலம் முகப்பேர் உள்வட்ட சாலை சந்திப்பில் ரூ.6.23 கோடி செலவில் ஒரு மேம்பாலம். வடபழனி உள்வட்ட சாலை-என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் ரூ. 30 கோடி செலவில் ஒரு மேம்பாலம். பெரியார் ஈவெ.ரா சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் அண்ணா வளையில் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் ஆகிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு  திமுக மீண்டும் ஆட்சி வந்துள்ள நிலையில், சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, 335 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  முதல் மேம்பாலம், தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலும், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ரான்ஸ் சாலை சந்திப்பில் 2வது மேம்பாலமும் கணேசபுரத்தில் தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு பதிலாக மூன்றாவது மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேம்பாலம் கட்டுவதற்கு, புதிய மேம்பாலங்களின் வடிவமைப்புகளுக்கு அனுமதி அளித்து மாநகராட்சி ஆணையம் கடந்த 2021ம் ஆண்டு  டிசம்பர் மாதம்  தீர்மானம் நிறைவேற்றி நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பியது.

வடசென்னையின் முக்கிய வாகன நெரிசலுக்கு காரணமாகஉள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் ஒருபுறம் நடைபாதையுடன் இருவழிப்பாதை பிரிக்கப்படாத இருவழிப்பாதை உள்ளது. புதிய மேம்பாலம் 142 கோடி ரூபாய் செலவில் 680 மீட்டருக்கு நான்கு வழிச்சாலையுடன் கட்டப்படும்.  ‘சுரங்கப்பாதையில் 4 ரயில் பாதைகள் உள்ளன. டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் புளியந்தோப்பு ஹைரோட்டில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வரை நான்கு வழிப்பாதை பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்டீபன்சன் லேன் சுரங்கப்பாதைக்கு வடக்கே சுமார் 20 மீ தொலைவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் தொடங்கி மூன்று வழி சந்திப்பை உருவாக்குகிறது.

ஓட்டேரி சந்திப்பில், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ரான்ஸ் சாலையை இணைக்கும் இருவழி மேம்பாலம் கட்டப்படும்.

தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் இருந்தாலும், தெற்கு உஸ்மான் சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் சாய்வுப் பகுதியை இணைக்கும் வகையில் சிஐடி நகர் 1 மற்றும் 4வது பிரதான சாலை சந்திப்புகளுக்கு மேலே செல்லும் வகையில் புதிய மேம்பாலம் கட்டமைப்பை மாநகராட்சி நிர்வாகம் வடிவமைத்துள்ளது.