மதுரை: மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு, தென்மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.  மதுரை நடைபெறும்,  அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.  அதன்படி நேற்று அவனியாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இன்று பாலமேட்டில்  (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. நாளை   (17-ந் தேதி) அலங்காநல்லூரில் நடைபெற உள்ளது.

இந்தாண்டு கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு, அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், பார்வையாளர்கள், மாடு பிடிவீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மாடு பிடி வீரர்களும், காளைகளும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பாலமேட்டில் நடைபெறும்  ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு, காங்கேயம் பசுமாடும் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்க காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

அதுபோல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரிலும்  இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.  இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.  இன்றையஅ  ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 400 மாடுகள் பங்கு பெறவும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் 400 காளைகள், 300 வீரர்கள் களம் காணுகின்றன. உள்ளூர் மக்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.