சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு (2021) செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கதாமதப்படுத்தியதால், முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். அதுபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து, நீட் தேர்வு குறித்த மனுவை அளித்தது. அதற்குப் பிறகும், நீட் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்தது.

இந்த நிலையில்,  நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். பிப்ரவரி 1-ம் தேதி, நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் 3-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தார். அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய தகவல்கள் மற்றும் அடுத்த கட்டமாக மீண்டும் ஒருமசோதாவை தாக்கல் செய்து அனுப்புவது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.