சென்னை:

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கில்,  மத்திய, மாநில அரசுகளின் விளக்கத்தை தொடர்ந்து முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை 2 மசோதாக்களை நிறைவேற்றி, மத்தியஅரசுக்கு அனுப்பியது. இந்த மசோதாக்களை நிராகரித்து விட்டதாக மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில், நீட் மசோதா தொடர்பான வழக்கின் விசாரணையின்போது தெரிவித்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்தியஅரசு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகஅரசு சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர்,  நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து சட்டமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தப்பட்டது என்றும், மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன என்றும் கூறியது. இதற்கு மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.