சென்னை:

திராவிட முன்னேற்றக் கழகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களின் செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்வது வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2021ம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க திட்ட மிட்டுள்ள திமுக, தற்போது காலியாக உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தோல்வியை சந்தித்துள்ள நிலையில், திமுகவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதி களில் வெற்றி பெற்ற திமுக, தனது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 101 ஆக அதிகரித்து உள்ளது.

அதுபோல நாடாளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றுள்ள திமுக, தற்போது  மக்களவை யில் 3வது பெரிய கட்சியாக உள்ளது. இந்த நிலையில்,  திமுகவின் செயல்பாடுகளை ஊக்கு விக்கும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை இருக்க வேண்டும்  ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய அனைத்துத் தொகுதிகளையும் வென்றதைத் தவிர, அதிக இடங்களை வெல்வதை கருத்தில்கொண்டு,  தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் செயல்திறனை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

தற்போதைய திமுக எம்எல் ஏக்களில் பலரது நடவடிக்கை திருப்தியில்லாத நிலையில், இதே நிலை நீடித்தால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்பதால், எம்எல்ஏக்களின் செயல்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் திமுகவின் கட்சி நிர்வாகிகள் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ள திமுக தலைமை , அதன்பிறகு கட்சியில் பெரும் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.