சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது என்று கூறியதுடன்,  நீட் தேர்வை தமிழ்நாட்டில் தாங்கள் அனுமதிக்கவில்லை என விளக்கம் அளித்தார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் விவகாரம், புதுக்கோட்டை விவகாரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் நீட் தொடர்பான காரசார விவாதத்தைத் தொடர்ந்து, அது தொடர்பான விளக்கம் அளித்தார்.

நீட் தேர்வு தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் தமிழ்நாட்டிற்கு நீட் வரவில்லை. யாருடைய ஆட்சிக் காலத்தில் நீட் நுழைந்தது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் கூறினார்.

மீண்டும்  பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.

இதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எங்கள் ஆட்சியில் நீட் தேர்வை எதிர்த்து வந்ததாக தெரிவித்தார்.  மேலும், நீட்டை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும், அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிமுக அனுப்பிய தீர்மானம் குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை சட்டப்பேரவையில் ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ’நாங்கள் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வை வரவிடவில்லை. இதை புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு விவாதமே தேவையில்லை என்றவர், நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது  என்று கூறினார்.