சென்னை

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுள்ளதாகத் தமிழக ஆளுநருக்கு தி க தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான கி வீரமணி நேற்று தனது 89 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடினார்.   அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.  இதையொட்டி சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் விழா ஒன்று நடந்தது.

இந்த விழாவில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.  இந்நிகழ்வில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுப. வீரபாண்டியன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் கி வீரமணி உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதைத் திருப்பி அனுப்பாமலும் பதில் அளிக்காமலும் திருத்தம் கூறாமலும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.