கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து கேரள உயர்கல்வி அமைச்சர் பிந்து மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொல்லம் அருகே அயூரில் உள்ள மர் தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்போர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் ‘மெட்டல் ஹூக்’ வைத்த ப்ரா-வை கழட்ட வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தேர்வு மையத்திற்குள் மெட்டல் எதுவும் அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதிப்படக்கூறியதை அடுத்து மாணவிகள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தங்கள் உள்ளாடையை அகற்றிவிட்டு தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மர் தோமா நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்ட நிலையில், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தேர்வு நடத்தும் அதிகாரிகள் அனைவரும் நீட் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.

இருந்தபோதும் மாணவிகள் பலர் உள்ளாடை இன்றி தேர்வு அறைக்குள் அமர கூச்சப்பட்டு அழுததை அடுத்து அதிகாரிகளிடம் பேசி ‘ஷால்’ அணிய அனுமதி பெற்றுத்தந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு மைய்ய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேலும், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விட்டு  மாணவிகளின் உள்ளாடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து செல்லவேண்டிய அவலமும் அரங்கேறியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கேரள மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு இடங்களில் விதவிதமான பிரச்சனையை சந்தித்து வருவதால், அதிகாரிகளின் இந்த வினோதமான அத்துமீறல் நடைமுறைக்கு உரிய வழிகாட்டுதல் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பலநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த பெண்கள் கடந்த ஒரு நூறாண்டாக அனுபவித்து வரும் சுதந்திரத்தை தற்போது இந்த நீட் தேர்வு சம்பவங்கள் மூலம் மீண்டும் அடிமைப்படுத்துவதாக கேரளாவில் உள்ள பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.