சென்னை: நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அரசு திட்டங்களின் பயன்கள் உடனுக்குடன் மக்களுக்கு சென்று சேர்வதை, பயனாளிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களுடன் உரையாடினார். இந்ததிட்டத்தின்படி, அரசு திட்டங்களின் பயன்கள்குறித்து அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் படி அறிவுறுத்தினார்.
இந்த திட்டம் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் முதன்மையான நோக்கம். தமிழகத்தில் மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், முதல்வரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் என திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றன. இவை ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்கள் ஆகும்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை பெறுகின்றனர். விடியல் பயண திட்டத்தில் பெண்கள் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர். ஒரு கோடி பேர், ‘மக்களை தேடிமருத்துவம்’ திட்டத்திலும், 16 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்திலும், புதுமைப்பெண் திட்டத்தில் 4.81 லட்சம் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்றும் பயனடைகின்றனர்.
நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்கள், இல்லம் தேடி கல்வியில் 24.86 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். புதிய குடிநீர் இணைப்பை 62.40 லட்சம் பேர், புதிய இலவச மின் இணைப்பை 2 லட்சம் பேர், உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம்முதியோர், 5 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பெறுகின்றனர். ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரிதிட்டத்தில் 19.69 லட்சம் பேருக்குபயனளிக்கும் மனுக்களுக்கும், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 3.40 லட்சம் மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இந்த அரசு வெற்றிகண்டுள்ளது. எங்களை சிலர்குடும்ப ஆட்சி என்கின்றனர். ஆம்,இது குடும்ப ஆட்சிதான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கைதூக்கிவிடும் ஆட்சி. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஏராளமான மனுக்கள் என்னிடம்வழங்கப்பட்டன. அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியதால், இப்போது மக்களின் கைகளில் மனுக்களை காணமுடியவில்லை. முகங்களில் மகிழ்ச்சியை காண்கிறேன். அந்த மகிழ்ச்சியை மேலும்உறுதிசெய்ய தொடங்கப்பட்டதுதான் ‘நீங்கள் நலமா’ திட்டம்.
இத்திட்டத்தை செயல்படுத்தஉருவாக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்து, சிலபயனாளிகளிடம் உரையாடி அவர்களது கருத்துகளை கேட்டறிந்தேன். ஒவ்வொரு குடும்பத்தின் குரலையும் கேட்டு அவர்களது குறைகளை போக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
அதேபோல, அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். பயனாளிகளின் கருத்துகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம், இந்த அரசின் நலம்,தமிழகத்தின் நலம். அந்த நலனை காக்க நான் உழைப்பதன் மற்றும்ஒரு அடையாளம்தான் ‘நீங்கள் நலமா’ திட்டம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உங்கள் அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயனர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்து, ஆவன செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து, ‘’நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் பயனானிகளை நேரடியாக காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.