டெல்லி: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்புபணிக்கு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு படையினர், 11 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பினர்.

பிப்ரவரி 6-ம் தேதி துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்  ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கியது.  இந்த நிலநடுக்ம் காரணமாக, துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகப்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உலக நாடுகள் இறங்கின. அதன்படி இந்தியா தரப்பிலும்,  7 சிறப்பு விமானங்களில் மீட்புக் குழுவினர் மோப்ப நாய்களுடனும், நிவாரண பொருட்கள், மருந்துகளுடன் அங்கு சென்றனர்.. அங்கு பல்வேறு மீட்புப் பணிகள், நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்த நிலையில், முதல்கட்டமாக  துருக்கி சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் 47 பேர் அடங்கிய குழுவினர் நேற்று இந்தியா திரும்பினர். டெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் தரையிறங்கிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீட்புக் குழுவுடன் சென்றிருந்த ராம்போ, ஹனிஆகிய மோப்ப நாய்களும் இந்தியாவுக்கு திரும்பின. இரு மோப்ப நாய்களும் துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பலரைஅடையாளம் காட்டின. இதன்காரணமாக துருக்கி நாளிதழ்களில் இந்திய மீட்பு படையினரின் பணி வெகுவாக பாராட்டப்பட்டது. . மேலும் பல்வேறு இந்திய குழுக்கள் துருக்கியில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து ஐ.நா. அமைதிப்படை அதிகாரிகள் கூறும்போது, “நேபாளத்தை சேர்ந்த ராணுவ மேஜர் நிர்மல் குமார் தலைமையில் 415 ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் சிரியாவில் முகாமிட்டுள்ளனர். இதில் 200 பேர் இந்திய வீரர்கள்ஆவர். இந்தியா உட்பட பல்வேறுநாடுகளில் இருந்து சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தனர்.

துருக்கி பூகம்பத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்துள்ளன. இந்தகட்டிட இடிபாடுகளில் இன்னமும் பலர் சிக்கியுள்ளனர். 11 நாட்களுக்குப் பிறகு துருக்கியின் அன்டாக்யா பகுதியில் 14 வயது சிறுவன் உஸ்மான் நேற்று முன்தினம் மீட்கப்பட்டான். அதே பகுதியில் மெஹமத்(26), முஸ்தபா (33) என்ற 2 இளைஞர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர். குடிநீர், உணவு இன்றி பலவீனமான நிலையில் இருந்த 3 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துருக்கியின் கரம்மான்மராஸ் பகுதியில் நேற்று முன்தினம் 17 வயது சிறுமி அலினா உயிருடன் மீட்கப்பட்டார். மிகவும் மோசமான நிலையில் இருந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.