புதுடெல்லி: ஜுன் மாதம் 17 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள 17வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேசி வருகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

புதிய அரசு தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. எனவே, இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பேசத் தொடங்கியுள்ளது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், அந்தத் துறையின் இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலும் தங்களிடம் பேசியுள்ளதாக சில எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடா கல்யாண் பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான குலாம்நபி ஆசாத் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.