புதுடெல்லி: தோள்சீலைப் போராட்டம் குறித்த பாடத்தை, 9ம் வகுப்பு புத்தகத்திலிருந்து என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நீக்கியுள்ளதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; ஒன்பதாம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில், கேரளாவின் முந்தைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போரட்டம் (பெண்களுக்கன முலை வரி எதிர்ப்பு போராட்டம்) குறித்த பாடம் இடம்பெற்றிருந்தது.

“ஆடை அணிதல்: ஒரு சமூக வரலாறு” என்ற தலைப்பில், 19ம் நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில், நாடார் பெண்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டம் பற்றிய பாடம் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது அந்தப் பகுதிதான் நீக்கப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து வேறு 2 பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என என்.சி.இ.ஆர்.டி. தரப்பில் கூறப்பட்டாலும், ‘கீழ்தட்டுப் பெண்களின் ஒரு வீரம் செறிந்த, தன்மானத்துக்கான போரட்டம் குறித்த பதிவை அழிக்கும் முயற்சிதான் இது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, இதே என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில், இந்திய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பாக, மாமேதை அம்பேத்கரை, அன்றைய பிரதமர் நேரு சவுக்கால் அடிப்பதுபோன்ற கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.

– மதுரை மாயாண்டி