தமிழ் ஓடிடி தளம் புதியபடங்கள், தொடர்கள் என வெளியிட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “O2” திரைப்படத்தை, ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிட உள்ளது.

விக்னேஷ் ஜி.எஸ். இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்ஆர். பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம் “O2”. இது குறித்து இயக்குநர் கூறும்போது, “படத்தைக் காண்போரின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் பேருந்தில் செல்லும்போது விபத்துஏற்பட்டுவிடுகிறது. நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, ஆர்.என். ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்” என்றார்.

படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பல்வேறு இடைவிடாத பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் தொடர்களை உலகளவில் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் “O2” திரைப்படத்தினை உலகமெங்கும் விரைவில் ஒளிபரப்பவுள்ளது.