ன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ?  பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம் எல்லேரும் அறிவோம், ஆனால் அவள் அதை மட்டுமா அருள்வாள், இக லோகத்துக்கு மட்டுமல்லாது மோக்ஷத்துக்கும் அல்லவா வழி செய்வாள்!
அன்னை என்பவள் கருணையின் வடிவம். அவளிடம் மனமுருகி வேண்டினால் தந்தையிடம் சிபாரிசு செய்யும் தாயைப்போல  நமக்காக அவள் பெருமாளிடம் சிபாரிசு செய்து குழந்தைகளாகிய நம்மை அரவணைப்பாள்.
1
நான் ஒரு வீட்டில் கொலுவுக்குப் போயிருந்தேன். சாத்திர முறைப்படி அமைந்த கொலு.. அவர்கள் வீட்டில்  என்ன நடந்தது?
என்று கேட்டு நேற்று நிறுத்தியிருந்தோமல்லவா?
சில வீடுகளில் படாடோபமான ஜிகினா ஜொலிக்கும் நவராத்திரி இருக்கும், ஆனால் அது சாத்திரப்படி இருக்காது. அதற்காக அங்கும் அம்பாள் வராமல் இருந்துவிட மாட்டாள். எனினும் முறைப்படி வேண்டிக் கலசம் வைத்து அவளை மனமாரப்பூஜித்தால் ஓடித்தான் வருவாள்.
இந்த மண்ணில் தோன்றி மண்ணில் மறைந்து மண்ணோடு கலக்கும் மனிதர்களின் குறுகிய வாழ்வில் இறைசிந்தனை இருந்தாலே மேன்மையுறலாம் என்பதை நினைவூட்டவே மண்பொம்மைகளை வைக்கிறோம் என்று ஒரு மிகப் பெரிய உபன்யாசகர் விளக்கவுரை கூறினார்.
ஆகவே சாத்திர முறைப்படி பொம்மைகள் வைக்க வேண்டுமானால் கட்டாயம் குறைந்தது மூன்று மண் பொம்மைகளாவது இருக்க வேண்டும்.
ஒரு வீட்டில் தசாவாதாரத்தை வரிசை தப்பி வைத்திருந்தார்கள். அறியாமல் செய்யும் எதுவுமே பிழையில்லை  என்பார்கள். எனினும் அறிந்து கொள்ளவே முயலவில்லை என்றால் எப்படி!
மத்ஸ்ய கூர்ம வராக நரசிம்ம வாமன பரசுராம ராம பலராம கிருஷ்ண கல்கி என்பவையே தசாவதார வரிசை. இதைப் பல முறை சொல்லச் சொல்ல ஜபத்துக்கு ஜபமுமாயிற்று வரிசைக்கு வரிசையுமாயிற்று.
எனினும் வரிசையை நினைவு வைத்துக் கொள்ள ஒரு சுலப வழி இருக்கிறது. அதைப் பார்ப்போமா? ஆதியில் தோன்றிய நீர்வாழ் உயிரினம் மீன். மச்சாவதாரம். நீரிலும் நிலத்திலும் வாழ்வது கூர்மம் எனப்படும் ஆமை. நிலத்தில் வாழ் மிருகம் வராகம். மிருகமும் மனிதனும் சேர்ந்த கலவை நர+சிம்மன். மனிதனிலேயே குள்ள வடிவம் வாமனன். பிறகு கோபம் மிகுந்த மனிதன் பரசுராமன். முழுமையான மனிதர் ராமர். இறைத்தன்மை மிக்கவர் கிருஷ்ணர். உயர்ந்த இறைவன் கல்கி.
சுருங்கச் சொன்னால் பரிணாம வளர்ச்சியை நினைவில் கொண்டால் தசாவதாரம் நினைவுக்கு வரும்.
மெய்ஞ்ஞாயமும் விஞ்ஞானமும் கலந்த ஒரு அவதார வரிசை.
இதையெல்லாம் மிகச் சரியாக அவர்கள் வீட்டில் வைத்திருந்தார்கள். உடை விஷயத்திலும் மங்களகரமாக வீட்டை வைத்திருந்த  வகையிலும் அப்பழுக்கு சொல்வதற்கில்லை. எனினும் மிகுந்த மன வேதனையுடன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தேன். ஏன் அப்படி?
நாளை பார்ப்போம்
இப்போது…
இந்த நாலாம் நாளில் நம் வீட்டுக்கு வரப்போகும் தேவி பற்றி அறிவோமா?
இவள் பெயர் கௌமாரி. மயில் மீது வருவாள். ஒரு விசேஷம் என்ன தெரியுமா? அடுத்த தலைமுறையின் உயர்வுக்கு உதவுபவள் இவள். இவள் சோடசாக்ஷரி  மாதாவாக வருவாள். கலசத்துக்குள் அமரவிருக்கும் தேவியின் பெயர் ரோகிணி.
இவளை தியானித்தால் குடும்பத்தில்  உள்ளவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவாள்.
இன்றைய கோலத்தை அட்சதையால் போட வேண்டும். அதைக் கும்பமாகப் போட வேண்டும்.
இன்று பைரவி ராகம் பாடினால் அவள் உருகி இறங்கி  அருள்வாள். கதம்ப சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். ‘
தேவசேனாபதி முருகரின் கைவேலின் சக்தியின் வடிவம் இவள். பயத்தையும் பீதியையும் அச்சத்தையும் ஒழிப்பாள்.  வெண்பட்டு அணிந்து வருவாள். நா ம் நீல நூல் சேலை அணிந்து பூஜை செய்ய வேண்டும்.
வருபவர்களில் பெண் குழந்தைகளுக்குச் சோழி கொடுக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்குக் குந்துமணியும் பெரிவர்களுக்கு கிளிஞ்சலும் வைத்துத் தர வேண்டும். செப்பால் செய்த ஸ்ரீசக்ரம் அளிக்கலாம். இவள் விசாலாட்சியாக வந்து உறைவாள்.
எதுவும் அளிக்க முடியாதவர்களும் மனசுக்குள் தியானித்தால் அவள் முழுமையாக அருள்வாள். நம்பிக்கை முக்கியம். படாடோபமல்ல கொலு.
நீங்கள் அறியாததா தோழி?