நவராத்திரி: சின்னஞ்சிறு காமதேனு! : வேதா கோபாலன்

Must read

மீபத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான விழிப்புணர்வை நம் சிநேகிதிகளிடம் பார்க்கிறேன்.
நான் வசிக்கும் பகுதி நகரமும் அல்ல கிராமமும் அல்ல. புறநகர்ப்பகுதி. நகரத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகளும் கிராமத்தில் கிடைக்கு அமைதியும் (ஓரளவு) இங்கு நிலவும்.
எல்லோரும் எல்லோரையும் கொலுவுக்கு அழைப்பதும் அந்த அழைப்பைப் பலரும் மதித்து அவர்கள் வீட்டுக்குச் செல்வதும் இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது.
கொடுக்கும் குணம் வளரும். வாங்குபவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். அந்த நிறைவு காரணமாக மனம் ஆசி வழங்கும். அந்த ஆசி நம்மை வாழ வைக்கும்.
இங்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இதில் பாட்டுப்பாடுபவர்களுக்கு ஸ்வர ஞானம் இருக்க வேண்டும் என்பதில்லை. பத்து வருடம் நிபுணர்களிடம் சிக்ஷை எடுத்திருக்க வேண்டும் என்பதும் இல்லை.
என் சிறு வயதில் நான் பார்த்த நவராத்திரி கொலு பற்றி யோசித்தால், மனம் மகிழ்ந்து நிறையும். தெருவே கோலாகலமாக இருக்கும். பொம்மைத் தேர்வுகளிலாகட்டும்… பாடும்போதாகட்டும்… வேடங்கள் புனையும்போதாகட்டும்… தயக்கமின்றி ஒரு துணிப்பையை சுண்டல் சேகரிப்புக்காக எடுத்துக் கொண்டு செல்லும்போதாகட்டும்.. ”நாலு பேர் நம்மை ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ?” என்று யோசித்ததே இல்லை. எல்லோருமே நம்மை நல்லவிதமாய்த்தான் பார்ப்பார்கள் என்றும் புகழ்வார்கள் என்றும் மனதில் மாயை நிறைந்திருந்தது.
அப்போது வெற்றிலை பாக்கில் ஒரு வாழைப்பழம் வைத்துத் தருவார்கள். மிகவும் வயதான பெண்மணிகள் வந்தால் அது ஒரு ஜாக்பாட் போல. ஒரு தேங்காய் வைத்துக் கொடுப்பார்கள். (கல்யாணங்களிலேயே சாத்துக்குடி மற்றும் தேங்காய்ப் பைதானே?!)
1
நவராத்திரியில் தினமும் கட்டாயமாக சுண்டல் பொட்டலம் உண்டு, அபூர்வமாக அதைச் செய்ய இயலாத நாட்களில் பொட்டுக்கடலை(அல்லது உடைச்ச கடலையை) நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து கல்லுரலில் உலக்கையால் இடித்து ஒரு இனிப்புப் பொடி செய்வார்கள்.
நவராத்திரி வெள்ளிக்கிழமையானால்  அனேகமாகப் பல வீடுகளில் அருமையான புட்டு செய்வார்கள். நவராத்திரி சனிக்கிழமைக்கு எள் இனிப்புப் பொடி செய்வார்கள். சில வீடுகளில் கடலை உருண்டைகூட வைப்பதுண்டு.
அவ்வளவுதான்.
ஆனால்…
யாரோ எப்போதோ இடையில் ஏற்படுத்திய பழக்கம் காரணமாக இந்த அன்பளிப்பு வைத்துக் கொடுக்கும் வழக்கம்  ஆரம்பமானது. நெட்டையும் குட்டையும் நீலமும் பச்சையும் வட்டமும் சதுரமுமா ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத பிளாஸ்டிக் டப்பாக்களும் வடிதட்டுக்களும்…
மொத்தமாய்ச் சேர்த்துப் பார்க்கும்போது இவற்றையெல்லாம் உபயோகிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சீராக ஒன்றுபோல் இருப்பவற்றை சமையலறையில் பயன்படுத்திப் பழகிவிட்டோம். ஆகவே ரவிக்கைத் துணிகளுக்கு ஏற்பட்ட கதிதான் இவற்றிற்கும். மற்றவர்களுக்குக் கடத்தப்படுகின்றன.
அவர்கள் இன்னொருவருக்குத் தருவார்களோ? அபூர்வமான விதிவிலக்குகள் இருக்கலாம்,
நாலைந்து வருடங்களுக்கு முன் இவ்வாறு நான் பார்த்த நிலை இப்போது மாறியிருப்பதற்கு மிகவும் மகிழ்கிறேன். நல்ல பொருட்களை வைத்துக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு வீட்டில் சின்னஞ்சிறு காமதேனு.. அபாரம், மறுசுழற்சியாவது மற்றவர்களுக்குக் கடத்தவதாவது!!
மேலும் சில விஷங்கள் அன்பளிப்பது பற்றிச் சிந்திக்கலாமா தோழியரே? வெண்கல ஜோதி.. சின்னஞ்சிறு ஊதுவத்தி ஸ்டாண்ட்.. பயன்மிக்க பக்தி அல்லது சுலோகப் புத்தகங்கள் ஆகியவை தரலாமே?
இன்று முதல் சரஸ்வதியின் தினங்கள்.
சரி..இப்போது நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் பகுதி
இன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வரப்போகிறவள் நாரசிம்ஹி. இவள் சிம்மவாகனத்தில்  வருவாள். துர்க்கமாசுரனை வதம் செய்த மாதுர்க்கா இவள். இவள் சாம்பவிரூபமாக  வருவாள். சூக்ஷும சக்தியை நமக்குள் விருத்தி செய்து தருவாள்.
சிங்க வாகனத்தில், கூரிய நகங்களுடன் எதிரிகளை அழித்து வருவாள். எனவே இன்றைக்கு அவளைப் பூஜித்தால் எதிரிகள் செய்யும் தொல்லை உங்களுக்கு இனி இல்லை.
இன்றைக்குக் காசுகள் (அதாவது நாணயங்கள்)  வைத்துத் தாமரைப்பூ வடிவம் வரையுங்கள். பிலஹரி ராகத்துக்கு அவள் மயங்கி அருளை அள்ளி வழங்குவாள். இவள் சுமங்கலி வடிவம் எடுத்து வருவாள். கும்பத்துக்குள் பத்மாக்ஷியாக உறைவாள். எலுமிச்சை சாதம் இவள் விரும்பி ஏற்கும் நைவேத்யம். இவள் கரு நீலப்புடவை அணிந்து வருவாள். நாம் மஞ்சள் நிற ஆடை அணிந்து அவளைப் பூஜிக்க வேண்டும்.
எதிரிகளை அழிக்கும்போது மட்டும் யானை நிறப்பட்டாடை அணிந்து சங்கநாதம் செய்து வருவாள்.
இவற்றைப் பின்பற்றி அவள் அருள் பெறுக சிநேகிதிகளே!

More articles

Latest article