கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படம் தயாராகி வருகிறது. மொத்தம் 9 இயக்குநர்கள், 9 குறும்படங்களை இயக்குகின்றனர்.

மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா தயாரித்து வரும் இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் மூலமாகக் கிடைக்கும் லாபத்தை வைத்துச் செய்யவிருந்த நல உதவிகளை வெள்ளிக்கிழமை அன்று தயாரிப்புத் தரப்பு ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்துப் படக்குழுவினருக்கு மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா சார்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

“இன்று நவரசா மூலமாகக் கிடைக்கும் நன்மையை, துறையில் நமது சக பணியாளர்களுக்கு பூமிகா ட்ரஸ்ட் மூலமாகவும் ஃபெப்ஸி மூலமாகவும் விநியோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. ப்ரீபெய்ட் கார்டுகள் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. இது ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும்.

ஒவ்வொருவருக்கும், இந்த கார்டு மூலம் மாதம் ரூ.1500 வழங்கப்படும். இது ஐந்து மாதங்கள் தொடரும். இதை வைத்து மளிகை சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். இதனால் பயனடைபவர்களை அடையாளம் காணும் பணி கடந்த 6 மாதங்களாக ஃபெப்ஸி அமைப்புடன் சேர்ந்து நடந்து வருகிறது.

இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. நீங்கள்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறீர்கள். நமது துறை, அதன் உறுப்பினர்களுக்காகக் காட்டும் அக்கறையை விரைவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம் என்று நம்புகிறோம்.

நன்றி.

மணி, ஜெயேந்திரா”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.