கோவை:
பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈசா யோகா மையம் குறித்து மாதர் சங்கத்தினர்  அளித்த புகாரை, மகளிர் ஆணைய உறுப்பினர்  மறுத்ததும், அதனால் மகளிர் அமைப்பினர்  மறியலில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜக்கிவாசுதேவ் நடத்தும் ஈசா யோகா மையத்தில் உள்ள   லதா, கீதா ஆகிய இரண்டு பெண்கள் தொடர்பாக அவர்களது தந்தை  காமாஜ், காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து லதா, கீதா இருவரும் ,  தங்கள் விருப்பப்படி வாழ்வதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என  தேசிய மகளிர் ஆணையத்துக்கு மனு அனுப்பினர்.
இதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு,  ஈசா யோகா மையத்தில் இரு பெண்களிடமும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள  அரசு விருந்தினர் இல்லத்தில் பேராசிரியர் காமராஜிடம் விசாரணை நடத்தினார்.

லதா, கீதா
லதா, கீதா

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக லதா புகார் குறித்து பேராசிரியர் காமராஜிடம் மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் காமராஜ், “ஈசா யோகா மையத்தின் நிர்பந்தத்தின் பேரில் தனது குழந்தைகள் புகார்கள் அளித்து இருக்கிறார்கள்.   ஈசா மையத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக மகளிர் ஆணைய உறுப்பினர்களிடம் தெரிவித்து இருக்கிறேன்.
ஈசா மையத்தை விட்டு வெளியே வைத்து, எனது மகள்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனது மகள்கள் மட்டுமின்றி அங்குள்ள 200 சன்னியாசி பெண்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று மகளிர் ஆணைய உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.
அப்போது, விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு, “பேராசிரியர் காமராஜிடமும்  அவரது மகள்களிடமும் விசாரணை நடத்தினேன். அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிப்பேன்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
லதா, கீதா ஆகியோரின் தந்தை காமராஜ் மற்றும் தாயார்
லதா, கீதா ஆகியோரின் தந்தை காமராஜ் மற்றும் தாயார்

இதற்கிடையே,  அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம் தலைமையிலான நிர்வாகிகள்   ஈசா மையம் தொடர்பான புகார் மனு அளிக்க விருந்தினர் இல்லம் வந்தார்கள்.  ஆனால் சுஷ்மாசாகு தனக்கு நேரமாகிவிட்டது    என கூறி  காரில் ஏறி அமர்ந்தார்.
அப்போது  மாதர் சங்கத்தினர்,” ஈசா மையத்தில் நூற்றுக்கணக்கானோர் மூளைச்சலவை செய்து சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்க வேண்டும் என்று நாங்கள் இங்கு போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஈசா மையத்தில் இருந்து வந்த புகாரை பெற்றுக்கொண்டு கண்துடைப்பாக விசாரணை மேற்கொள்வது நியாயமில்லை.  எங்களின் தரப்பு கோரிக்கைகளையும் நீங்கள் கேட்க வேண்டும், அங்கு சிக்கியுள்ள மற்ற பெண்களையும் காப்பாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
புகாரை வாங்க மறுத்த மகளிர் ஆணைய உறுப்பினரின் காரை மறித்த மாதர் சங்கத்தினர்..
புகாரை வாங்க மறுத்த மகளிர் ஆணைய உறுப்பினரின் காரை மறித்த மாதர் சங்கத்தினர்..

ஆனால் மாதர் சங்கத்தினரிடம் சுஷ்மாசாகு பேசாமல் அவசர அவசரமாக காரில் ஏறினார். இதனையடுத்து மாதர் சங்கத்தினர் காரை மறித்து வாக்குவாதம் செய்தனர்.
இதனையடுத்து தனக்கு இ மெயில் மூலம் புகாரை அனுப்பும்படியும், அதனை தேசிய மகளிர் ஆணையத்திற்கு தாக்கல் செய்வதாக கூறிய சுஷ்மாசாகு அங்கிருந்து அவசரமாக கிளம்பி சென்றார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர், ஈசா குறித்த புகாரை வாங்க மறுத்ததும், அதைத் தொடர்ந்து மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டதும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.