பிஷாரா, உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிற்றூர். அவ்வூர் ரவி சிசோடியா என்னும் ஒரு 22 வயது இளைஞனின் மரணத்துக்காக துக்கம் கொண்டாடி வருகிறது. அந்த இளைஞனும் மேலும் 18 பேரும் சேர்ந்து முகமது அக்லக் என்பவரை அவரது வீட்டில் மாட்டுக்கறி உண்டார் என்ற காரணத்துக்காக அடித்தே கொன்றார்கள். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த ரவி சிசோடியா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

ravi_sisodia

கடந்த அக்டோபர் 5 -ஆம் தேதி ரவி சிசோடியாவின் இறுதிச் சடங்குக்காக அவ்வூரில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. அவரது உடல் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கபட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடிப் பெட்டியின் மீது இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருந்தது. ஒரு சாதாரண குடிமகனின், அதுவும் கொலைக் குற்றவாளியின் சடலத்தின்மீது புனிதமான தேசியக் கொடியை போர்த்தியதுதான் இப்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

flag1

நமது தேசியக்கொடியின் பயன்பாட்டுக்கென்று நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஏகப்பட்ட வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. எப்படி கொடி ஏற்றுவது, யார் ஏற்ற வேண்டும்? யாருடைய சடலத்தின் மீது கொடியை போர்த்த வேண்டும் என்று பல வரையறைகள் உள்ளன.
இந்தியாவின் தேசியக்கொடிக்கான வரையறை எண் 5 கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
1. தேசியக்கொடி அரசாங்க / இராணுவ / மத்திய பாரா மிலிட்டரி சார்ந்த பிரமுகர்களின் சடலங்கள் மீது மாத்திரமே போர்த்தப்பட வேண்டும்
2. எவ்வித தனிப்பட்ட நபர்களது சடலங்கள் மீதும் தேசியக் கொடியை போர்த்தக் கூடாது.
3. தேசியக் கொடியை எந்த வாகனத்தின் மீதும், முன்புறத்திலோ, மேற்புறத்திலோ அல்லது பக்கவாட்டிலோ போர்த்தக்கூடாது.

flag2

ஆக பிஷாராவில் தேசியக் கொடி விஷயத்தில் சட்டம் துணிந்து மீறப்பட்டிருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் சட்டம் 1950, மற்றும் தேசிய சின்னங்களை அவமதிப்பதை தடுக்கும் சட்டம் 1971 ஆகிய இரு சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலும் இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்துக்கு அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.
இந்த சம்பவம் நடந்த நாளில் அவ்வூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது, அவ்விடத்துக்கு மத்திய மந்திரி வந்திருக்கிறார், கடுமையான போலீஸ் பாதுகாப்பு இருந்திருக்கிறது. நாட்டின் உயரிய சின்னமான தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏன் யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை அல்லது அலட்சியம் செய்துவிட்டார்கள் என்பது புதிராக இருக்கிறது.
இது சம்பந்தமாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர வாய்ப்பிருக்கிறது.