உ.பி.
உபியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி.
இஸ்லாமியர்களின் விவாகரத்தான மூன்று முறை தலாக் எனப்படும் ‘முத்தலாக்’ விவகாரத்தில் மவுனம் காத்து வந்த மோடி,முதல் முறையாக மவுனம் கலைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும் என்பது அவர்களின் மத கோட்பாடு.

ஆனால், இந்த மத கோட்பாடு தவறாக பயன்படுத்தப்படுவதாக இஸ்லாமிய பெண்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதை விசாரித்த உச்ச நீதி மன்றம், மத்திய அரசின் கருத்தை கேட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு,
இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்–பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை.
அதில் சமரசத்துக்கு இடமில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது.
பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதற்கு மதம் காரணமாக இருக்கலாமா என்ற அடிப்படை கேள்வியை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும்.
மேற்கண்ட அடிப்படையில், இந்த வழக்கத்தை கோர்ட்டு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த கருத்துக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு கருத்தை கூறி வருகிறார்கள். இதன் காரணமாக சமீபக காலமாக பரபரப்புக்குரிய விவாதமாக மாறியுள்ள முஸ்லிம்கள் ‘தலாக்’ கூறும் முறை குறித்து பிரதமர் மோடி நேற்று தனது கருத்தை தெரிவித்தார்.
‘ முத்தலாக் முறையை அரசியல் ஆக்காதீர்கள். பெண்களின் உரிமை என்பது வளர்ச்சிக்குறிய விஷயம்’ என அவர் வலியுறுத்தினார்.
நேற்று உ.பி.யில்  உள்ள பண்டேல்கண்ட்மண்டலத்தில்  ‘மஹா பரிவர்த்தன்’ என்ற பெயரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம், பேரணி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது , “ நாட்டில் இப்போது முஸ்லிம்கள் மக்கள் கூறும் ‘தலாக்’ விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்துக்களில் யாராவது ஒருவர் கருக்கலைப்பு செய்தால், நிச்சயம் அவர் சிறைக்குச் செல்வார். அதேபோலத்தான், எனது முஸ்லிம் சகோதரிகளிடம் தொலைபேசி வழியாக சிலர் ‘தலாக்’ கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து குற்றம் செய்து வருகிறார்கள்.
இந்த ‘தலாக்’ விஷயத்தை ஊடங்கள் அனைத்தும், இந்து-முஸ்லிம் பிரச்சினையாகவோ, பாரதிய ஜனதா கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் எதிரானதுபோல் சித்தரிக்காதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு, அடக்குமுறைகள் இருக்கக்கூடாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.
ஜனநாயகத்தில் எந்த ஒரு விஷயமும் விவாதிக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும். தலாக் விஷயத்தில் ஒதுங்கி இருக்க நினைப்பவர்கள்தான் மக்களை தூண்டிவிடுகிறார்கள். மூன்று முறை ‘தலாக்’ கூறும் முறை மூலம் முஸ்லிம் பெண்கள் சீரழிக்கப்படு வதை நான் அனுமதிக்கமாட்டேன்.
muslim
முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமா? பாதுகாக்கக் கூடாதா?, அவர்கள் சமஉரிமை பெற வேண்டுமா? அல்லது வேண்டாமா? என மக்களாகிய நீங்கள் சொல்லுங்கள்.
நாட்டில் சில அரசியல் கட்சிகள் தலாக் விஷயத்தை அரசியல் லாபத்துக்காக, வாக்கு வங்கிக்காக பயன்படுத்தி,  21-ம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கிறார்கள். இது என்ன நேர்மை? இதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
அரசியல் செய்வதற்கும், தேர்தலுக்கும் தனி இடம் இருக்கிறது. ஆனால், அரசியலமைப்பு சட்டப்படியும், நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் பெண்கள் தங்கள் உரிமையை பெற வேண்டும்.
இந்த தலாக் விவாதம் முஸ்லிம் சமூகத்தில் புனித குர்ஆன் அறிந்த அறிவார்ந்த நபர்களுக்கு இடையே இருக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் அறிவார்ந்த மக்களும், முற்போக்கு வாதிகளும் இருக்கிறார்கள். படித்த முஸ்லிம் பெண்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
தொலைக்காட்சி விவாதத்தில் தலாக் விஷயம் இந்து-முஸ்லிம் பிரச்சினையாக திரும்பக்கூடாது.
முஸ்லிம் சமூகத்தில் மாற்றம் கொண்டுவருபவர்களுக்கும், 125 கோடி மக்களுக்கும் தெரியக்கூடாது என நினைப்பவர்களுக்கும்  இடையே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.