நியூஸ்பாண்ட்:

ரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம், சசிகலா தரப்பினர் பயன்படுத்தி வரும் ஜெயா டிவி, மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழுக்கும் சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஓபிஎஸ் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், அவருக்கும், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டதால், ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அதையடுத்து ஓபிஎஸ்-ஐ மிரட்டி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. அதையடுத்து,  ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இதன் காரணமாக அதிமுக உடைந்தது. அவருக்கு ஆதரவாக மாஃபா.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், செம்மலை போன்றவர்கள் திரண்டனர்.

இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்களை கூட்டிய சசிகலா, தன்னை சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்து, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க கோரிக்கை மனு கொடுத்தார்.

ஆனால், அவர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருப்பதால், அவரை பதவி ஏற்க அழைக்க அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மறுத்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர்மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதால், அவர் பெங்களூரு சிறைக்குச் சென்றார். முன்னதாக அவர் சார்பாக எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்து அறிவித்தார்.

இதன் காரணமாக உடைந்த அதிமுகவில் விரிசல் மேலும் பலமானது. அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அப்போது சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கு இரட்டை இலையை ஒதுக்க வேண்டும் என்று கூறியதால், தேர்தல் ஆணையம் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகிய வற்றை முடக்குவதாக அறிவித்தது.

தொடர்ந்து, இரட்டை இலையை மீட்க சசிகலா தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

நாளடைவில், சசிகலா தரப்பினர் நெருக்குதல் காரணமாக எரிச்சல் அடைந்த எடப்பாடி, அவர்களிடம் இருந்து விலகியே இருந்து வந்தார். இதன் காரணமாக சசிகலா தரப்பினருக்கு கோபம் ஏற்பட்டதால், தங்களுக்கு என தனி அணியை டிடிவி உருவாக்கினார். பின்னர் அவர்கள் மூலம் எடப்பாடியை மாற்ற முயற்சி மேற்கொண்டார்.

இதுகுறித்து கவர்னரை சந்தித்து மனு கொடுக்க தனது ஆதரவு 18 எம்எல்ஏக்களுக்கு உத்தர விட்டார். அவர்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

ஆனால், அவர்களது கோரிக்கையை ஏற்க கவர்னர் மறுத்துவிட்டார். இந்நிலையில், அதிமுக கொறடா 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதன் படி 18 எம்.எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி தரப்பும் இணைந்தது. டிடிவி தரப்பினர் தனியாக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் இணைந்து அதிமுக பொதுக்குழு செயற்குழுவை கூட்டி, டிடிவியை கட்சியில் இருந்து நீக்கி அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியும், தாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபித்தனர். அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் ஆவனங்கள் தாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணையம் பல கட்ட விசாரணை நடத்தி நேற்று, ஓபிஎஸ், இபிஎஸ் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை ஒதுக்கி உத்தரவிட்டது.

இதன் காரணமாக டிடிவி தரப்பினர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை, அதிமுக கொடி, அதிமுக என்ற பெயர் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில்,  அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜெயலலிதா இருக்கும்போதே,  கட்சியிடம் இருந்து சசிகலா தரப்புக்கு கை மாறியது.

அதுபோல ஜெயலலிதா தொடங்கிய ஜெயா டிவி, ஜெயா பிளஸ், ஜெயா மூவி போன்ற டிவிக்களும் சசிகலா தரப்பினருக்கு கைமாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணியினர், “நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ  கருப்பு சிவப்பு வெள்ளையுடன் அண்ணா படம் பொறிக்கப்பட்ட கொடி இடம் பெற்றிருக்கும்.

அதுபோல ஜெயா டிவியில் அனைத்து லோகோவிலும், இரட்டை இலை சின்னமே முக்கியமாக உள்ளது.

தற்போது, தேர்தல் கமிஷன் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி மற்றும் முழு உரிமைகளையும்  வழங்கி உள்ள நிலையில், சசிகலா தரப்பினர் இரட்டை இலையை பயன்படுத்தக்கூடாது.  இது குறித்து சசிகலா – தினகரன் தரப்புக்கு அறிவிக்கப்போகிறோம்.

விரைவில் நமது எம்.ஜி.ஆர். என்ற பெயரில் நாங்களே நாளிதழ் துவங்குவோம். நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அச்சடிக்கும் இடம், உரிமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் நமது எம்.ஜி.ஆர். என்ற பெயரை அவர்கள் பயன்படுத்தக்கூடாது. அந்த பெயர் அதிமுகவுக்குத்தான் சொந்தம். ஆகவே  இனி அவர்கள் நமது எம்.ஜி.ஆர்  பெயரில் நாளேடு நடத்தக்கூடாது. அதே போல ஜெயா டிவி அவர்களுக்கு உரிமையாக இருக்கலாம். ஆனால் அந்த பெயர் மற்றும் இரட்டை இலை லோகோவை அவர்கள் பயன்படுத்தக்கூடாது” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணியினர்.

அதே நேரம் சசி – தினகரன் அணியினர் வேறுவிதமாகக் கூறுகிறார்கள்.

அவர்கள், “நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் உரிமை முழுதும் எஹ்களிடம் இருக்கிறது.  அதற்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியது.  அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு என்ற வேண்டுமானால் தற்போத நாங்கள் சொல்ல முடியாமல் இருக்கலாம். அதை நாங்கள் தற்காலிகமாக தவிர்த்துவிடுவோம். மற்றபடி அந்த பெயரும் முழு உரிமையும் எங்களுக்கே சட்டப்படி சொந்தம்.

மேலும், இரட்டை இலை எங்களுக்கு இல்லை என்பது தற்போதைய நிலை. ஆகவே ஜெயா டிவியில் இரட்டை இலை லோகோவுக்கு பதிலாக தற்காலிகமாக வேறு லோகோ பயன்படுத்தலாமா என்று யோசித்து வருகிறோம். ஆனால் ஜெயா என்கிற பெயரை மாற்றுவதாக இல்லை.

அதே நேரம் விரைவில் சட்ட நடவடிக்கைகள் மூலம் அ.தி.மு.க. என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் எங்களுக்குக் கிடைக்கும்.

அதன் பிறகு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு என்ற கேப்சனுடன் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வெளியாகும். அதே போல, ஜெயா டிவியின் தற்காலிக லோகோ மாற்றப்பட்டு, இரட்டை இலையே இருக்கும். விரைவில் இதெல்லாம் நடக்கும்” என்கிறார்கள் சசி – தினகரன் அணியினர்.