அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர்

சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான்.

அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு பக்தி வைத்திருந்தான்.அனுதினமும் ஆலயம் சென்று ஏகாம்பரநாதரை வணங்கி,தனக்குப் பார்வை அருள வேண்டும் என வேண்டி வந்தான்.

ஒரு நாள் அவன் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட ஏகாம்பரநாதர், ஒரு கண்ணில் மட்டும் பார்வையை வழங்கினார். மகிழ்ந்த அவன், “மற்றொரு கண்ணுக்கு நான் எவ்விடம் போவேன்?” என்று கேட்டான்.

இறைவன் கொங்குநாடு சென்று அங்குள்ள கொடுவாய் எனும் சேத்திரத்தில் கோவர்த்தனாம்பிகையுடன் நாகேஸ்வரராக அருளும் எம்மை வணங்கினால் கண் பார்வை கிடைக்கும் என்றருளினார்.இளைஞனும் அவ்வாறே கொங்குநாடு வந்து கொடுவாய் தலத்தில் வேண்ட, அவனுக்குப் பார்வை கிடைத்ததாக கர்ணபரம்பரை செய்தி ஒன்று கூறுகிறது.

சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். முன்புறம் மயில் வாகனம் உள்ளது.

ஆலயத்தைச் சுற்றிலும் முல்லை, அரளி,நந்தியாவட்டை மலர்கள் நிறைந்த தோட்டம் பசுமை விரித்திருக்கிறது.சிறிய செயற்கைக் குளத்தின் நடுவில் லட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்த நிலையில் சுதைவடிவாக உள்ளனர்.

ஏறக்குறைய ஏழடி உயரத்திற்கு பரந்து விரிந்து ஒரு புற்று உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால்,உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இது இராகு, கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது.

ஒரே கல்லில் ஆன தீபஸ்தம்பம்,சனீஸ்வரர் சன்னதி. அதற்குப் பின்புறம் நவகிரகங்கள் மேடையில் காட்சியளிக்கின்றன.

அவற்றைச் சுற்றி வந்தால் பைரவர் சன்னதி.பைரவருக்கு முன் சந்திரனும்,அடுத்து சூரியனும் வீற்றிருக்கின்றனர்.கற்றளியாலான கோயில் இது.கி.பி.12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

இடப்பக்கம் கன்னி மூலையில் மாப்பிள்ளை போல அமர்ந்து இருக்கிறார் கணபதி. அவருக்கு முன்புறம் அழகியவதனத்தோடு காட்சியளிக்கும் அம்பாளின் சன்னதி.

புளியமரத்தின் அடியிலும் ஓர் பிள்ளையார் இருக்கிறார்.முற்காலத்தில் இந்தக் கொடுவாய் தலம், முல்லை வனம் என்றே குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களின் வேண்டுதலைப் புறக்கணிக்காது அருள்பாலிப்பவராக அருள்மணம் கமழ காட்சியளிக்கிறார்.

அவருக்கு இடப்புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா,துர்க்கையும் அருகே சண்டிகேஸ்வரரும் உள்ளனர்.

இங்கு ஒரே தலத்தில் துர்கா, லட்சுமி,சரஸ்வதி மூவரையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி.

கோரிக்கைகள்:

திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால்,உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.