நாகர்கோவில்
இன்று 2 ஆம் நாளாக நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது வியாபாரிகள் மறியல் செய்துள்ளனர்.
நாகர்கோவில் நகரில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே குண்டும் குழியுமாக மிகவும் மோசமாகச் சாலைகளில், ஆக்கிரமிப்பாளர்களும் கபளீகரம் செய்வதால், மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகி உள்ளனர். பல சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத நிலை பல சாலைகளில் உள்ளது. எனவே மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது.
முதல் நாளான நேற்று அவ்வை சண்முகம் சாலையில் ஒழுகினசேரி சந்திப்பு முதல் கோட்டாறு சந்திப்பு வரையிலும், டிஸ்லரி சாலை, ஜோஸ்வா தெரு (பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, சற்குண வீதி கால்வாய், ராமன்புதூர் சந்திப்பு, தட்டான் விளை சாலை, நாகராஜா கோயில் ரத வீதிகள், நீதிமன்ற சாலை, கேப் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தன. அகற்றலின் போது கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், சாலையில் வைக்கப்பட்டு இருந்த மேஜைகள், பொருட்கள் அகற்றப்பட்டன.
இன்று (14ம்தேதி) 2வது நாளாகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் நகரமைப்பு ஆய்வாளர்கள் கெபின் ஜாய், சந்தோஷ், மகேஸ்வரி மற்றும் துர்காதேவி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணியில் இருந்து செம்மாங்குடி சாலை, அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, தட்டான் விளை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக செம்மாங்குடி சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகைகளும் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டு இருக்கும்போது முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் ஆர்.எம். முருகன், ”நீங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். அதே சமயத்தில் செம்மாங்குடி சாலை கடந்த 6 மாதங்களாகக் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. தீபாவளி சமயத்தில் பலர் விழுந்து காயம் அடைந்தனர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி வியாபாரம் நடத்த வேண்டும்.
சாலை மோசமாக உள்ளதால், மக்கள் வருவதில்லை. ஆணையரிடம் பலமுறை கூறியும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலையைப் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார். கொரோனாவால் வியாபாரம் இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கே வழியில்லை. பிறகு எப்படி சாலைப் பணிக்கு நாங்கள் பணம் கொடுக்க முடியும். எனவே சாலையை முதலில் சீரமைக்க வேண்டும். அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை எடுங்கள்” எனக் கூறி சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்.
மேலும் சில வியாபாரிகளும், பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் சாலை சீரமைப்பு பணி தொடங்கும் எனக் கூறி சமாதானம் செய்து மறியலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.