திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம்
திருநெல்வேலியில் இருந்து தென் கிழக்காகச் சென்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் வரும். அதுதான் திருக்குருகூர். தாமிரபரணி ஆற்றங்கரையில் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில், ஐந்து நிலை ராஜகோபுரமும், மூன்று பிரகாரங்களும் கொண்டுள்ளது.
மூலவர் ஸ்ரீ ஆதிநாதப் பெருமாள், தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
பிரம்மா, சங்கன் முனிவர், மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் திருமாலின் திருமேனியழகை நேரடியாக தரிசித்தனர்.
சுயம்புவாக தோன்றிய மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். இந்திரன் தன் பெற்றோர்களை உபசரிக்காமல் சாபமடைந்து, இத்தலத்திலுள்ள பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். முனிவர்களுக்குப் பெருமாள் பூமி பிராட்டியுடன் வராக அவதாரத்தைக் காட்டிய இடம். தாந்தன் என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பகவான் மோட்சம் கொடுத்ததால் தாந்த க்ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. ஸ்ரீ லஷ்மி, பெருமாளை அடைய இங்குத் தவமிருந்து பின்னர் திருமால் லக்ஷ்மியை மாலையாக மார்பினில் தரித்துக் கொண்ட க்ஷேத்திரம்.
காரியர் உடைய நம்பிக்கு மகனாகப் பிறந்த சடகோபன் பிறந்ததிலிருந்து அழாமல் கண் விழிக்காமல் உணவு கொள்ளாமல் இருந்ததால், இந்த கோவிலில் கொண்டு வந்தனர். குழந்தை சடகோபன் இத்தலத்தை அடைந்ததும், தவழ்ந்து கோயிலின் பிரகாரத்தில் உள்ள புளியமரப் பொந்தில் அமர்ந்து உணவு உண்ணாமல் 16 வருஷம் இருந்தான். வடநாடு யாத்திரைக்கு சென்ற மதுரகவியாழ்வார்க்கு இந்த செய்தி கிடைத்தது. திரும்பி வந்தார். புளியமர பொந்தில் இருப்பவன் மகாஞானி என்றுணர்ந்து சடகோப நம்மாழ்வார் என்று பெயர் சூட்டினார். பின்னர் தான் நம்மாழ்வார் பாட, பேச ஆரம்பித்தார்.
அரையர் சேவை உண்டு. திருவரங்கத்தைப் பூலோக வைகுண்டம் என்றால் இந்த ஆழ்வார் திருநகரி பரமபதத்தின் எல்லை என்று சொல்வதுண்டு. இங்குள்ள கல் நாதஸ்வரம் உறங்காத புளியமரம் மிகவும் விசேஷமானது.
பரிகாரம் :
ஊனமுற்றவர்களாகப் பிறந்தவர்கள் எந்த சிகிச்சையும் பயனளிக்காதவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாகப் பலவிதத்திலும் அல்லல்படுவோர் அத்தனை பேர்களுடைய ஊழ்வினைகளும் பஞ்சாய் பறந்து போகவேண்டுமானால் ஆழ்வார் திருநகரிக்கு வந்து ஆதிநாத பெருமாளுக்கு என்னென்ன பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமோ அதைச் செய்தால் போதும். ஒரு அற்புதமான எதிர்காலம் அமையும். விதியும் மாறும்.