சென்னை: நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை 20-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 2024 ஜனவரியில் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கப்பல் சேவை தொடங்கிய 7 நாளில் நிறுத்தப்படுவது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 14ந்தேதி (அக்டோபர் 14, 2023 சனிக்கிழமை) சுமார் 40 பயணிகளுடன் , தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து, பாக் ஜலசந்தியைக் கடந்து, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்குச் செரியபாணி  என்ற பயணிகள் கப்பல் வெற்றிரகமாக பயணித்தது. இந்த கப்பல் சேவையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் வரும் 20ந்தேதியுடன் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பயணிகள் கப்பல்  நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்பட்டு,  பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கப்பலில் பயணிக்க நபர் ஒன்றுக்கு   டிக்கெட்டின் விலை 7,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் சற்று அதிகமாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்தன.  மேலும் முன்பதிவு வசதிகள் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் (அக்டோபர் 20ந்தேதி) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  இலங்கை சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும்,  மீண்டும் ஜனவரி மாதம் கப்பல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,   ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவையை படகு சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே,  1900களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கடல்சார் சேவை, 1980களில் இலங்கையில் இனக்கலவரத்தை அடுத்து நிறுத்தப்பட்டது. கடல் வழியை மீண்டும் செயல்படுத்துவது என்பது இரு நாட்டு அரசாங்கங்களின் கொள்கையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இந்தியாவும் இலங்கையும் 2011 இல் கடல் இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, தூத்துக்குடி- கொழும்பு இடையே அந்த ஆண்டு படகு சேவை தொடங்கியது. ஆனால் சில தளவாடக் காரணங்களால், ஆறு மாதங்களுக்குள் இது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கிய நிலையில், 7 நாளில் மீண்டும் நிறுத்தப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக  கடந்த ஜூலை மாதம், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது, ​​கொழும்பு, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை மேம்படுத்துதல் மற்றும் கடல் வழிகளை புத்துயிர் பெறுதல் உள்ளிட்ட கடல் இணைப்புகளை வலியுறுத்தும் தொலைநோக்கு ஆவணத்தை இரு அரசாங்கங்களும் வெளியிட்டன. இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளுக்கிடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதோடு, தென்னிந்தியாவில் உள்ள கோவில் நகரங்களுக்கும், மத தலங்களுக்கும் புனித யாத்ரீகர்களை, செரியபாணி கப்பல் அழைத்து வருவதற்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.