சென்னை: சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்களின் வசதிக்காக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் வகையில், அரசு போக்குவரத்து துறை சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் வார விடுமுறை தினங்களிலும் அதிக பேருந்துகளை இயங்கி வருகிறது. இதற்கு  மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த ஆண்டு வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை இருப்போருக்கு 3 நாட்கள் சேர்த்து விடுமுறை கிடைத்துவிட்டது. அதுபோல விஜயதசமி தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை ஆகும். எனவே  4 நாட்கள் விடுமுறை தினமாகியுள்ளது.

இந்த நிலையில்,  ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி,  2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,    சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.