சென்னை: நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ்  பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில்  மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணை இருப்பதாக கூறி, மத்தியஅரசு, அதை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இது அந்த பகுதி விவசாயத்தை அடியோடு ஒழித்துவிடுவதுடன், நீர் ஆதாரத்தையும் பாழாக்கிவிடும் என்பதால், தொடர் போராட்டம் நடத்தி, அந்த திட்டங்கள் தடுக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டுகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இதனால்,  விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  நாகப்பட்டினம் அருகே இருக்கிற நரிமணம்  சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் காரணமாக,  பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள  முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் விளை நிலங்களை பாதிக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் உள்ள விலை நிலங்களை குறைந்த விலையில் கையகப்படுத்த முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என விவசாய அமைப்புகள் குரல் எழுப்பின.  இன்று (நவம்பர் 16-ஆம் தேதி)  நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  நாகை  பெட்ரோ கெமிக்கல் மண்டலம் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,ஒப்பந்தப்புள்ளி கோரியதை திரும்பப் பெறுவதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அறிவித்துள்ளன.